news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Sunday 28 February 2016

ஆயிரம் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுஒரே மேஜருக்கு அதிக வாய்ப்பு


அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பதவி உயர்வு மூலம் 1000க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஒரே 'மேஜருக்கு' (பட்டமேல்படிப்பு) அதிக வாய்ப்பு உள்ளது என, கல்வித்துறை தெரிவிக்கிறது.அரசு உயர்,மேல்நிலைப்பள்ளிகளுக்கான காலியிடங்களில் 50 சதவீதம் பதவி உயர்விலும், 50 சதவீதம் நேரடி தேர்வு மூலமும் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதன்படி, தமிழகத்தில் 2016--17ல் 1000க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கி, காலியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக 2002 முதல் 2008க்குள் பணிக்கு சேர்ந்த அனைத்துப் பாட பட்டதாரி ஆசிரியர்களின் தகுதி விபரம் சேகரிக்கப்படுகிறது. ஒரே பாடத்தில் இளநிலை, முதுநிலைபட்டம் பெற்றவர்களுக்கு 1:1, வேறு பாடத்தில் (கிராஸ் மேஜர்) பட்டமேற்படிப்பு முடித்தவர்களுக்கு 1:3 என்ற அடிப்ப டையில் பதவி உயர்வு வழங்க
பள்ளிக்கல்வித்துறை திட்ட மிட்டுள்ளது. தமிழ் பாடத்திற்கு 2002--03 லும், ஆங்கி லத்திற்கு 2005--06 லும், அறிவியல் பாடங்களுக்கு 2007--08லும், கணிதத்திற்கு 2005--06லும், வரலாறுக்கு 2003--04 வரையிலும் உத்தேச பட்டியல் தயாரிக்கின்றனர். இதன் மூலம் அடுத்தக் கல்வியாண்டு துவக்கத்தில் 50 சதவீத முதுநிலை ஆசிரியர் காலியிடங்கள் நிரப்பப்படும் என, கல்வித்துறை தெரிவிக்கின்றது.
அதிகாரி ஒருவர் கூறுகையில், “கடந்த இரு ஆண்டாக டி.ஆர். பி.,நேரடி தேர்வு நடக்கவில்லை.மொத்த காலியிடங்களில் பதவி உயர்வில் செல்வோரின் எண்ணிக்கை குறையும். அரசு உத்தரவில் 1,063 பேருக்கு வாய்ப்பு என குறிப்பிட்டு இருந்தாலும், பட்டியலில் இடம் பெற்ற எல்லோருக்கும் பதவி உயர்வு கிடைப்பது அரிது,” என்றார்.

பிளஸ் 2 தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்ட பொருள்கள் விவரம்

பிளஸ் 2 தேர்வு அறைக்குள் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் உள்ளிட்டவை கொண்டு செல்வதற்கு தடைசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் மார்ச் 4ஆம் தேதி முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வை, மதுரை மாவட்டத்தில் 92 மையங்களில் 37,863 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.

கடந்தாண்டு, மதுரை மத்திய சிறையில் பிளஸ் 2 தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 9 சிறைவாசிகள் மட்டுமே தேர்வெழுதுவதால், அங்கு தேர்வு மையம் அமைக்கப்படவில்லை.

மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வுக்கான நடவடிக்கை குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ. ஆஞ்சலோ இருதயசாமி வியாழக்கிழமை கூறியதாவது:

தனித்தேர்வர்கள் தவிர, பள்ளி மாணவர்களுக்கான தேர்வறை அனுமதிச் சீட்டு (ஹால் டிக்கெட்) அந்தந்தப் பள்ளிகளிலேயே வைக்கப்பட்டு, தேர்வின்போது மாணவர்களிடம் அளிக்கப்படும்.

தேர்வறைக்குள் மாணவர்கள் இரு சாதாரண பேனாக்கள், பென்சில், ரப்பர், ஸ்கேல் ஆகியவற்றை எடுத்துச் செல்லலாம். எலக்ட்ரானிக்ஸ் பேனா, எலக்ட்ரானிக்ஸ் கடிகாரம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கால்குலேட்டர் உள்ளிட்ட பொருள்களை எடுத்துச் செல்லக்கூடாது.

கணித இயற்பியல், கணக்கியல் பாடத் தேர்வுக்கு மட்டும் சாதாரண கால்குலேட்டரை தேர்வறைக்குள் எடுத்துச் செல்லலாம். அச்சிட்ட அல்லது எழுதிய தாள்களை உள்ளே எடுத்துச் செல்லக்கூடாது.

தேர்வறைகளில் தலா 2 போலீஸார் அல்லது காவல்துறை சார்ந்தவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். சிறப்பு கண்காணிப்புப் படைகள் தவிர்த்து, தேர்வறை ஒன்றுக்கு தலா 2 பேர் கொண்ட தனிப்படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  தேர்வு அறைகளில் தேவையான வெளிச்சம் இருக்குமாறும், மின்சார வசதியை உறுதிசெய்யுமாறும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

புதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் அரசாணை வெளியீடு-விளக்கம்

புதிய ஓய்வு ஊதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்க, அரசாணை வெளியிட்டுள்ளதால் நீண்டகால பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.1.4.2003க்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அதற்காக ஊழியர்களின் சம்பளத்தில் மாதம் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டது.

திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு 12 ஆண்டுகள் ஆனபின்பும் இதில் சேர்ந்த யாராலும் ஓய்வூதியம் பெற முடியவில்லை. ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில் சிலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஆசிரியர், அரசு ஊழியர்கள் பல ஆண்டுகளாக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த பிப்.,19அன்று, தமிழக முதல்வர், சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து, 
ஓய்வு பெற்ற மற்றும்ராஜினாமா செய்த, மரணம் அடைந்த, பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு தொகை உடனடியாக வழங்கப்படும் என அறிவித்தார்.
இதனை தொடர்ந்து, பிப்.,22ல் 
அன்று தமிழக அரசின் நிதித்துறை சார்பில், அரசாணை எண்-59 வெளியிடப்பட்டுள்ளது.
இத்தொகையை பெற, கணக்கு மற்றும் கருவூலத்துறை இயக்குநர் அலுவலகத்தில், விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் கிடைத்த ஒரு மாத காலத்திற்குள் தொகையை வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கான கணக்கு தலைப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. 
இந்த தொகை அனைத்தும் மின் பரிவர்த்தனை மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் கடந்த பல ஆண்டுகளாக நீடித்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்த திண்டுக்கல் பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது இந்த அரசாணையால், ஓய்வூதியம் குறித்த சர்ச்சைக்கு தற்காலிக தீர்வு மட்டுமே கிடைத்துள்ளது. நிரந்தர தீர்வு வேண்டுமெனில் 
தமிழக முதல்வர் ஏற்கனவே அறிவித்தவாறு புதிய ஓய்வூதிய திட்டத்தை 
ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும், என்றார்.

Friday 26 February 2016

பிளஸ் 2 வினாத்தாளுக்கு போலீஸ் பாதுகாப்பு

தமிழகத்தில் மார்ச் 4ம் தேதி பிளஸ் 2 தேர்வு தொடங்குகிறது. இத்தேர்வை 286 பள்ளிகளில் இருந்து 37 ஆயிரத்து 683 மாணவ, மாணவிகள் 92 மையங்களில் எழுது கின்றனர். மதுரை மாவட்டத்துக்கான வினாத்தாள்கள் நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டன. அவை 12 நோடல் மையங் களுக்கு பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன. மையங்களை முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி பார்வையிட்டார்.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “மாவட்டத்தில் மாணவ, மாணவி களின் எண்ணிக்கைக்கு அதிகமாகவே அனைத்துப் பாடங்களுக்கும் வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வினாத்தாளில் ஏதாவது பாதிப்பு இருக்கும் பட்சத்தில் அது மாற்றப்படும். ஒவ்வொரு நோடல் மையத்திலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மையத்தை திறக்க தலைமையாசிரியர், முதுகலை ஆசிரியர் என இருவரிடமும் சாவிகள் இருக்கும். இருவரும் இணைந்து திறக்கும் பட்சத்தில் தான் மையத்திற்குள் செல்ல முடியும். மதுரை டிஇஓ. அலுவலக மையத்தில் மட்டும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது” என்றார்.

Thursday 25 February 2016

மதுரையில் 'ஆசிரியர் இல்லம்' கட்ட அரசு ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 'இல்லம்' கட்ட இடம் தேர்வு

கல்வித்துறையில் எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ., உட்பட பல பிரிவுகளின் கீழ் ஆசிரியர்கள், அதிகாரிகளுக்கு அடிக்கடி பயிற்சி முகாம்கள் நடக்கின்றன.


மேலும் உயர்நீதிமன்றக் கிளை மதுரையில் உள்ளதால் வழக்குகள் தொடர்பாக இயக்குனர், இணை இயக்குனர்கள் உட்பட அதிகாரிகளும், 13 மாவட்ட கல்வி அதிகாரிகளும் அடிக்கடி இங்கு வருகின்றனர். அவர்கள் தனியார் ஓட்டல்களில் தான் தங்குகின்றனர்.மேலும், தலைமையாசிரியர்கள் கூட்டம், பொதுத் தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் முகாம்கள் பெரும்பாலும் தனியார் அல்லது உதவிபெறும் பள்ளிகளில் நடத்த வேண்டியுள்ளது. இதற்காக பள்ளிகளை தேர்வு செய்வது கல்வி அதிகாரிகளுக்கு சவாலாக உள்ளது.


இப்பிரச்னை குறித்து அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, அதற்கு தீர்வாக புதிதாக ஆசிரியர் இல்லம் கட்ட அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது.இதன் விளைவாக முதல்வர் ஜெயலலிதா சட்டபையில் 110 விதியின் கீழ் 'மதுரை மற்றும் கோவைக்கு ஆசிரியர் இல்லங்கள் (டீச்சர்ஸ் ஹோம்) தலா ரூ.3 கோடியில் கட்டப்படும்,' என அறிவித்தார்.


இதன்படி இரண்டு மாவட்டங்களுக்கும் நேஷனல் டீச்சர்ஸ் நிதியில் இருந்து அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இடம் தேர்வு செய்து அனுப்பவும் உத்தரவிடப்பட்டது.

ஆசிரியர் இல்லம்  ஒத்தக்கடையில் கட்டப்படவுள்ள இடத்தை மாவட்ட வருவாய்அலுவலர் வேலுச்சாமி முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி ஆய்வு செய்தனர்

GO.59 Dt.22.02.16 PENSION-CPS-Settlement of accumulation under CPS in respect of CPS Subscribers retired/resigned,died & terminated from service-Orders Issued.

Monday 22 February 2016

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் 3 மாதம் ஒத்திவைப்பு

ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக போராட, 28 ஆசிரியர்சங்கங்களை ஒன்றிணைத்து, தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ) உருவாக்கப்பட்டது. ஜாக்டோ சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வந்தது.
இந்த நிலையில், ஜாக்டோவின் உயர்மட்டக்குழுக் கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது.  ஜாக்டோ தனது கோரிக்கைக்காக தொடர்ந்து போராடி வந்தது. ஆனால் இந்த அரசு செவி மடுக்கவில்லை. 6 கட்ட தீவிர போராட்டத்துக்கு பிறகும் முதல்வர் ஜெயலலிதாவும், நிதியமைச்சர் பன்னீர் செல்வமும் கண்டு கொள்ளாத செயல் எங்களை அவமதித்து, அவமானப்படுத்தும் செயல். இந்த அரசின் மதிக்காத செயலை கடுமையான வருத்தத்துடன் பதிவு செய்கிறோம். மார்ச் மாதம் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், செய்முறைத்தேர்வுகள் மற்றும் ஆண்டு இறுதித்தேர்வுகள், சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால், போராட்டத்தை 3 மாத காலத்துக்கு ஒத்தி வைக்கிறோம்  என ஜாக்டோ சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது வெற்றி பெறும் வரை போராட்டம் தொடரும்

Sunday 21 February 2016

ஜாக்டோ தொடர்ச்சியான போராட்டம் - ஒரு பார்வை






ஜாக்டோ தொடர்ச்சியான போராட்டம்
கடந்த 8 மாதங்களாக
நான்கரையாண்டுகள் நம்பிக்கை
சொன்ன வாக்குறுதி நிறைவேற்றுவார் என்று.
நினைவூட்டலுக்காக
அனைத்துவகை ஜனநாயக போராட்டங்கள்
பேரணி,
தொடர்முழக்கம்.
சென்னை உண்ணாவிரதம்,
மறியல்,
மனிதசங்கிலி போராட்டம்
ஓய்வின்றி
எங்கள் பள்ளிப் பணிகளோடு.........

மௌனம் கலைந்தது
வந்த அறிக்கைகள் திருப்தி தரவில்லை
போராட்டத்தின் வலுவை உணரவில்லை.
இன்று ஒன்று கூடி இருக்கிறோம்
ஒவ்வொருவர் மனதிலும்
போராட்டத்தின் தீ
உள்ளுக்குள் சுட்டெரிக்கிறது.
செவிடன் காதுகளுக்கு
சத்தமிட்டும் ஓசை கேட்கவில்லை
பின் சத்தமிடுவதில் அர்த்தமில்லை
சக்தியை விணடிப்பது
நம்மை துவளச்செய்யும்
அறுவைச் சிகிச்சை தேவைபடுகிறது
சிகிச்சைக்கு பின் சத்தமிடுவோம்
இந்த அரசு நம்பிக்கை கொடுக்கவில்லை
தேர்தலில் அமையும் புதிய அரசிடம்
ஜாக்டோ கொண்டுசெல்லும்.
கனல் அணையவில்லை
களையவும் இல்லை
ஆசிரியர் ஒற்றுமை குறையவும் இல்லை
ஒரு சில சலசலப்புகள் சரிசெய்யப்படும்.
போராட்டம் போகும் தன்மையையை
உணர்ந்து
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி
சூழ்நிலையேற்ற விதத்தில்
முடிவெடுத்து
செயல்படுபவனே
பெற்றிபெறுவான்.
அதற்கான முடிவே
3 மாத கால காத்திருப்பு
இந்த காலம் இன்னும் முழுமையாய்
நம்மவர்களை ஈடுபட செய்யத்தான்
அனைவரிடம் கொண்டுசெல்லுங்கள்
இதைவிட பெரிய போராட்டம் காத்திருக்கிறது
என்பதை உணருங்கள்
இதைவிட பலத்தோடு எழுவோம்.
கோரிக்கைகளை வென்றடுப்போம்.
வெற்றிபெறும் வரை போராடுவோம்.




அரசு பள்ளிகளுக்கு மதுரை கலெக்டர் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க நடவடிக்கை

மதுரை: 'அரசு பள்ளிகள் கடந்தாண்டை விட 5 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற வேண்டும்,' என, கல்வித்துறை ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் கே.வீரராகவ ராவ் உத்தரவிட்டார்.
கலெக்டர் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் சீனிவாசமூர்த்தி, டி.இ.ஓ.,க்கள் லோகநாதன், துரைபாண்டி, ரேணுகாதேவி, தொடக்க கல்வி அலுவலர் ராஜாமணி பங்கேற்றனர்.
கடந்த பொதுத் தேர்வுகளில் அரசு பள்ளிகள் பெற்ற தேர்ச்சி விகிதம் ஆய்வு செய்யப்பட்டது. 70 சதவீதத்திற்கும் குறைவாக பெற்ற பள்ளிகளை தீவிரமாக கண்காணிக்க கலெக்டர் உத்தரவிட்டார். மாவட்ட தேர்ச்சியை 5 சதவீதம் அதிகரிக்க ஒவ்வொரு பள்ளியும் குறைந்தபட்சம் 5 சதவீதம் அதிக தேர்ச்சி பெற வேண்டும். சுமாராக படிக்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களை ஆசிரியர்கள் தத்தெடுத்து அதிக மதிப்பெண் பெற வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் வாசிப்பு மற்றும் எழுதும் திறன், கணித அடிப்படை அறிவை அதிகரிக்கவும், மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீதம் மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர் உத்தரவிட்டார்.
'வீக்' பட்டியல் : கடந்த முழு ஆண்டு தேர்வில் 60 சதவீதத்திற்குகீழ் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகள், அதன் தலைமையாசிரியர் பெயர், அலைபேசி விவர பட்டியல் தயாரிக்கவும் உத்தரவிடப்பட்டது. பட்டியலில் உள்ள தலைமையாசிரியர்களிடம் கலெக்டரே கற்பித்தல் குறித்து பேசவும் வாய்ப்புள்ளது

Friday 19 February 2016

19.2.16 அன்று மதுரை ஜாக்டோ கூட்டம் மாநில பொதுச்செயலாளர் இரா.பிரபாகரன் பங்கேற்பு


தமிழக முதல்வர் ஊதிய முரண்பாடு மற்றும் CPS திட்டம் பற்றி அறிவிப்பு ஏமாற்றம்.

JACTTO அமைப்பு அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் நம்பிக்கை வைத்து போராட்டம் ஒத்திவைத்திருந்தது 110 விதியின் கீழ் அறிவிப்பு வரும் என்று நம்பிக்கை ஊட்டினர்.

CPS திட்டம் பற்றி அரசுக்கு பரிந்துரைக்க வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்படும். அந்த வல்லுநர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தக்க முடிவு எடுக்கப்படும். என்ற அறிக்கை
யானைப்பசிக்கு சோளப்பொறி போன்றது எந்தபயனும் இல்லை

JACTTO உயர்மட்டக் கூட்டம் நாளை மறுநாள் (21.2.16) கூடி இதுபற்றி முடிவெடுக்க உள்ளது

நாளை மனித சங்கிலி போராட்டம் மதுரை இரயில் நிலையத்தில் நாளை (20.2.16) காலை 11 மணிமுதல் 12 வரை நடக்க இருக்கிறது.

நம் உணர்வுகளை புதுப்பிக்கவும் நமது ஏமாற்றத்தை எண்ணிக்கையில் காட்டவும் வடிவமைக்கப்பட்ட போராட்டம்.

CPS திட்டம் கைவிடும் வரை இந்தஅரசு மட்டுமல்ல எந்த அரசையும் தமிழ்நாட்டில் ஆளவிடப்போவது இல்லை.

ஆசிரியருக்கான கோரிக்கைகளைஒன்றிணைந்த ஆசிரியர் கூட்டமைப்பால் தான் அதைநோக்கி செல்லமுடியும்.


நம்பிக்கை வையுங்கள் கை கோருங்கள் நாளை நமதே

அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகைகள் உட்பட 11 அறிவிப்புகள் விவரம்

அரசு ஊழியர்கள் போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், அவர்களுக்கான குடும்ப நல நிதி உயர்வு, கவுரவ விரைவுரையாளர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் சட்டப்பேரவையில் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் ஜெயலலிதா,

"அரசின் அடித்தளமாக, அச்சாணியாக, முதுகெலும்பாக விளங்குபவர்கள் அரசு அலுவலர்கள். இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலர்களின் நலனில் எப்போதும் தனி அக்கறை கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

அரசு அலுவலர்கள் பணி தொடர்பாகவும், ஊதியம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பாகவும் பல்வேறு கோரிக்கைகள் விடுத்துள்ளனர்.

அரசு அலுவலர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை ஆராயும்படி மூத்த அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர், நிதித் துறை செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டிருந்தேன்.

அதன்படி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பல்வேறு அரசு அலுவலர் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி உள்ளனர். அதன் அடிப்படையில் அரசு அலுவலர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

1) குடும்ப நல நிதி உயர்வு:

கடந்த 40 ஆண்டுகளாக அரசு அலுவலர்களுக்கு குடும்பநல நிதித் திட்டம் என்ற ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு அரசு அலுவலர்களிடமிருந்து மாதந்தோறும் அவர்களது சம்பளத்திலிருந்து 30 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின்படி, பணிக் காலத்தில் அரசு அலுவலர் இறந்தால், அவரின் வாரிசுதாரருக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், வழங்கப்படுகிறது.

இந்த குடும்ப நல நிதி உதவியை, உயர்த்த வேண்டுமென பல்வேறு சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இதனை ஏற்று, இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை 3 லட்சம் ரூபாய் என உயர்த்தப்படும். அரசு அலுவலரின் சம்பளத்திலிருந்து மாதந்தோறும் 60 ரூபாய் இதற்காக பிடித்தம் செய்யப்படும். தற்போது, இத்திட்டத்திற்கு அரசு மானியமாக ஆண்டுதோறும் 6 கோடியே 18 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. குடும்ப நல நிதி உதவித் தொகை உயர்த்தப்படுவதால் ஏற்படும் கூடுதல் செலவான சுமார் 6 கோடி ரூபாயை அரசு வழங்கும்.

2) குழுக் காப்பீட்டுத் திட்டம் உயர்வு:

அரசு உதவி பெறும் அனைத்து கல்வி நிறுவனங்களில் பணி புரியும் அலுவலர்கள், மற்றும் ஆசிரியர்கள், சத்துணவுப் பணியாளர்கள்; உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கிராம ஊராட்சிகளின் பணியாளர்கள் ஆகியோருக்கு குழுக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்திற்கு காப்பீட்டுத் தொகையாக அரசு அலுவலர்களிடமிருந்து 30 ரூபாய் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படுகிறது. சராசரியாக ஆண்டொன்றுக்கு 15 கோடி ரூபாய் அலுவலர்களிடமிருந்து காப்பீட்டுத் தொகை பங்களிப்பாக பெறப்படுகிறது.

ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திற்கு சராசரியாக செலுத்தப்படும் காப்பீட்டுப் பிரிமியம் தொகை 37 கோடி ரூபாய் ஆகும். அதாவது அரசு அலுவலர்களின் பங்களிப்பு நீங்கலாக, இத்திட்டத்திற்கு அரசு ஆண்டொன்றுக்கு 22 கோடி ரூபாய் வழங்கி வருகிறது. இந்தக் குழுக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

அலுவலர்கள் தற்போது செலுத்தும் பங்களிப்பு 60 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படும். காப்பீட்டுத் தொகை 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுவதால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 20 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.

3) கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்ளுக்கு ஆண்டு ஊதிய உயர்வு:

கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்களின் பணி வரன்முறை கருணை அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட அரசு அலுவலர்கள் பணி வரன்முறை செய்யப்பட்ட பின்னரே, ஊதிய உயர்வு போன்ற பல்வேறு பணிப் பலன்களை அவர்கள் பெற இயலும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியுள்ளதால், இதில் காலதாமதம் ஏற்படுகிறது.

இதனைத் தவிர்க்கும் வகையில் 1.2.2016 வரை கருணை அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு, எந்தவித விதித் தளர்வும் தேவைப்படாத அனைத்து நபர்களின் பணி நியமனமும், பொது அரசாணை மூலமாக முறைப்படுத்தப்படும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டிய பதவிகளுக்கு, பொதுவான அரசாணை, வெளியிடப்பட்ட பின்னர் ஆணையத்தின் ஒப்புதல் பெறப்படும். விதித் தளர்வு தேவைப்படும் அலுவலர்களைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒப்புதல் பெற்று விதிகளைத் தளர்வு செய்வதற்கான அரசாணைகள் வெளியிடப்படும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒப்புதல் பெறப்படும் வரையில் அவர்களை தற்காலிக அரசு அலுவலர்களாகக் கருதி, அவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்க வகை செய்யப்படும்.

4) அங்கன்வாடி, சத்துணவுப் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு

அங்கன்வாடி மற்றும் சத்துணவுப் பணியாளர்கள் ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம், 1,000 ரூபாயாக, 1.4.2013 முதல் உயர்த்தப்பட்டது.

இந்த ஓய்வூதியம் 1,500 ரூபாயாக உயர்த்தப்படும். 39,809 ஓய்வு பெற்ற அங்கன்வாடிப் பணியாளர்கள், 47,064 ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்கள் என மொத்தம் 86,873 பணியாளர்கள் இதனால் பயன் பெறுவார்கள். இதனால், அரசுக்கு ஆண்டுதோறும் 51 கோடியே 13 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். சத்துணவுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணப் பயன் 50,000 ரூபாயிலிருந்து 60,000 ரூபாயாக உயர்த்தப்படும்.

சமையலர்களுக்கு வழங்கப்படும் பணப் பயன் 20,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாய் எனவும்; சமையல் உதவியாளர்களுக்கு, வழங்கப்படும் பணப் பயன் 20,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாய் எனவும் உயர்த்தப்படும்.

5) பணிக்கால தகுதி குறைப்பு:

ஊரக வளர்ச்சித் துறை பொறியியல் அலுவலர்கள் ஊரக வளர்ச்சித் துறையில் பட்டயப் படிப்பு முடித்துள்ள மேற்பார்வையாளர்களுக்கு, இளநிலைப் பொறியாளராக பதவி உயர்வு பெறுவதற்கான பணிக் காலத் தகுதி 10 ஆண்டுகளிலிருந்து 7 ஆண்டுகளாகக் குறைக்கப்படும். பொறியியல் பட்டப் படிப்பு முடித்துள்ள மேற்பார்வையாளர்களுக்கு, இப்பணிக் காலத் தகுதி 5 ஆண்டுகளிலிருந்து 4 ஆண்டுகளாகக் குறைக்கப்படும்.

6) உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு கணக்குத் தேர்வு ரத்து:

பள்ளிக் கல்வித் துறை இரண்டாம் நிலை உடற்பயிற்சி இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றுள்ள உடற்பயிற்சி ஆசிரியர்கள் கணக்குத் தேர்வு பெற வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்படும்.

7) கிராம சுகாதார செவிலியர்களுக்கு, துறை சுகாதார செவிலியர்களாக பதவி உயர்வு

மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இணை பேராசியர்களாகப் பணி புரியும், 157 மருத்துவர்களுக்கு, பேராசியர் பதவி உயர்வு வழங்கப்படும். தொகுப்பூதியத்தில் பணி புரியும் செவிலியர்களில், பணி மூப்பு அடிப்படையில் 1,500 செவிலியர்கள் காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்கள். பணி மூப்பு அடிப்படையில் 605 கிராம சுகாதார செவிலியர்களுக்கு, துறை சுகாதார செவிலியர்களாக பதவி உயர்வு வழங்கப்படும்.

8) கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு:

உயர்கல்வித் துறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு, வழங்கப்படும் மாத மதிப்பூதியம் 10,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக உயர்த்தப்படும்.

9) அரசு அலுவலர்கள் வழக்கை விசாரிக்க தீர்ப்பாயம்:

தமிழ்நாடு நிர்வாகத் தீர்ப்பாயம் அரசு அலுவலர்கள் பணி சார்ந்த வழக்குகளை நிர்வாகத் தீர்ப்பாயத்தில் தொடுத்து வந்தனர். தற்போது இந்த ஆணையம் இல்லாத காரணத்தால், இந்த வழக்குகள் உயர்நீதி மன்றத்தில் தான் தொடுக்கப்படுகின்றன. அரசு அலுவலர்களின் வழக்குகளை விசாரிக்க நிர்வாகத் தீர்ப்பாயம் எற்படுத்தப்பட வேண்டும் என அரசு அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை ஏற்று, நிர்வாகத் தீர்ப்பாயம் மீண்டும் ஏற்படுத்தப்படும்.

10) பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆராய வல்லுநர்க் குழு:

1.4.2003 முதல் அரசுப் பணியில் சேர்ந்துள்ள அரசு அலுவலர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஓய்வூதியப் பங்களிப்புத் தொகையும், அரசின் பங்களிப்புத் தொகையும், இவற்றிற்கான வட்டித் தொகையும் அரசுக் கணக்கில் தனியே வைக்கப்பட்டுள்ளன.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இறந்தவர்களின் வாரிசுதாரர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட வேண்டிய தொகை உடனடியாக வழங்கப்படும்.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே, செயல்படுத்திட வேண்டும் என பல்வேறு அரசு அலுவலர் சங்கங்கள் கோரி வருகின்றன. இந்த கோரிக்கை குறித்து தீவிரமாக ஆராயப்பட வேண்டும். எனவே, இது பற்றி ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைக்க வல்லுநர்க் குழு ஒன்று அமைக்கப்படும். அந்த வல்லுநர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தக்க முடிவு எடுக்கப்படும்.

11) ஊதிய விகிதங்கள் மாற்றம் குறித்து ஊதியக் குழு பரிசீலிக்கும்:

ஊதிய விகிதங்கள் தொடர்பான கோரிக்கைகள் ஊதிய விகிதங்களை மாற்றியமைத்தல், தொகுப்பூதியத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களை, காலமுறை ஊதியத்தின் கீழ்க் கொண்டு வருதல், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வருவோருக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்குதல், போன்றவை குறித்து, பல்வேறு கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

இக்கோரிக்கைகள், பல்வேறு அரசு அலுவலர்களின் ஊதிய விகிதங்களை ஒப்பிட்டு, அவர்களின் அதிகார நிலை மற்றும் துறைகளின் ஒப்புநிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பரிசீலிக்கப்பட வேண்டும்.

எனவே, இத்தகைய கோரிக்கைகளை ஊதியக் குழுவே பரிசீலிக்க இயலும் என்பதால், இந்த கோரிக்கைகள் அனைத்தும் எதிர் வரும் ஊதியக் குழு மூலம் பரிசீலிக்கப்படும்.

Thursday 18 February 2016

ஜாக்டோ போராட்ட முடிவு அறிவிப்பு

⏩20.2.16 மாவட்ட தலைநகரில் மனித சங்கிலி போராட்டம்
25.2.16 சென்னை பேரணி 
⏩தோ்தல் பணி புறக்கணிப்பு


         தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் திரு ந.ரெங்கராஜன் அவர்கள் தலைமையில் TESTF மாநில அலுவலகமான JSR  மாளிகையில் நடைபெற்ற ஜேக்டோ உயர்மட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் வருகிற
20.,2 .2016 அன்று மாவட்ட தலைநகரில் "மனித சங்கிலி" போராட்டம்
25 ம் தேதி " சென்னை கோட்டை" நோக்கி முற்றுகை போராட்டம்,
சட்டமன்ற தேர்தல் பணியை "புறக்கணிப்பு" உள்ளிட்ட மூன்று கட்ட போராட்டங்கள் அறிவித்து முடிவாற்றப்பட்டுள்ளது.

முதன்மைக்கல்வி அலுவலருடன் 16.2.16 அன்று பேசிய கோரிக்கைகள் நிறைவேற்றம்

நமது அமைப்பு முதன்மைக்கல்வி அலுவலருடன் பேசியதின் பலனாக இன்றே செய்முறைத்தேர்வுக்கான உழைப்புதியம் முதன்மைக்கல்வி அலுவலகத்தினால் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அகத் தேர்வாளர்  ,மொழி பாட ஆசிரியர்கள் தலைமை ஆசிரியரிடம் பணத்தை பெற்றுக்கொள்ளவும்

தி இந்து: தலையங்கம்- புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற முடியாதா?



அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்பதே சிறந்த தீர்வு
அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியமாக கடைசியாக அவர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதி கிடைத்துவந்தது. அது மட்டுமல்லாமல், ஊழியர் இறந்துவிட்டால் அவரின் மனைவிக்கோ மகளுக்கோ அந்த ஓய்வூதியம் தொடர்வதாக 1957 முதல் நடைமுறையில் இருந்தது.
ஆனால், தற்போது ஊழியரின் சம்பளத்தில் 10 சதவீதத்தைப் பிடித்து, அதை பங்குச் சந்தையிலும் கடன்பத்திரங்களிலும் முதலீடு செய்து, அதன் பயனை அவருக்குத் தருவதான புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்தது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை முக்கியமான கோரிக்கையாக வைத்து, தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ) போராடியது. ஆனால், மாநில அமைச்சர் “மத்திய அரசின் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டதால் புதிய ஓய்வூதியத் திட்டத்தை மாநில அரசால் திரும்பப் பெற முடியாது. அது சாத்தியமில்லாத விஷயம்’’ என்று விளக்கியுள்ளார். அவரின் விளக்கம் சரியானதல்ல.
அமைச்சர்களின் உறுதிமொழி
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பிப்ரவரி 10-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர். அவர்களின் முக்கியமான கோரிக்கையும் இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான்.
அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். முதலமைச்சரின் கவனத்துக்கு கோரிக்கைகளைக் கொண்டுசெல்வதாகவும், நிதிநிலை அறிக்கை சமர்ப்பிப் பதற்காகக் கூடுகிற சட்டசபை கூட்டத்தொடரின்போது பிப்ரவரி 16-ம் தேதி இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் உறுதியளித்தனர். ஆகவே, வேலைநிறுத்தத்தைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். அமைச்சர்களின் உறுதிமொழியைச் சில சங்கங்கள் ஏற்றுக்கொண்டன.
ஆனால், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் புதிய ஓய்வூதியத் திட்டம் திரும்பப் பெறப்படும் என்பதை எழுத்துபூர்வமான உடன்பாடாக ஏற்படுத்திக்கொள்ளலாம் என்று கேட்டுக்கொண்டது. அப்படிச் செய்துகொண்டால், வேலைநிறுத்த முடிவை மறுபரிசீலனை செய்வதாகத் தெரிவித்தது. அரசு அதற்குச் செவிசாய்க்கவில்லை. அதனால் வேலைநிறுத்தம் நீடிக்கிறது.
எப்படி வந்தது?
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கம்தான் இதை முதலில் அறிவித்தது. தனது ஆட்சியின் கடைசி ஐந்து மாதங்களுக்கு முன்பாக ஒரு நிர்வாக உத்தரவைப் போட்டது. அதன் மூலம்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் 1.1.2004 முதல் அமலாகியது.
இதற்கான சட்டம் செப்டம்பர் 2013-ல்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இந்தச் சட்டத்தை நிறை வேற்றியது. பாஜக இதை ஆதரித்ததில் ஆச்சரியமில்லை. 2014 பிப்ரவரி 1-ல்தான் இந்தச் சட்டம் அதிகாரபூர்வமாக அரசின் கெஜட்டில் அறிவிக்கப்பட்டது.
தமிழகம்தான் எல்லாவற்றிலும் முன்னோடி ஆயிற்றே? இந்தப் புதிய ஓய்வூதியம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அமலாக்கப்பட்டதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பாகவே
தமிழக அரசு ஊழியர்களுக்கு 1.4.2003 முதல் அப்போதைய அதிமுக அரசு அமல்படுத்திவிட்டது. 6.8.2003-ல் அரசாணையும் வெளியிட்டது. எனவே, தமிழக அரசு நினைத்தால் அதனைத் திரும்பப் பெறுவதில் எந்தத் தடையும் இல்லை.
ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையச் சட்டம் - 2013 (Pension Fund Regulatory and Development Authority Act - 2013) என்பது மத்திய அரசின் சட்டத்துக்குப் பெயர். இந்தச் சட்டத்தின்3(4) வது பிரிவில், ‘எந்த மாநில அரசும் அல்லது எந்த யூனியன் பிரதேச நிர்வாகமும் ஒரு அறிவிக்கை மூலம் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை அதன் ஊழியர்களுக்கு விரிவுபடுத்தலாம்’ எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் என்று பெயர். எனவே, மாநிலஅரசு விரும்பினால்தான், அந்த தேசிய ஓய்வூதியத் திட்டத்தைத் தன் ஊழியர்களுக்கு விரிவுபடுத்தலாம். விரும்பாவிட்டால், தன் ஊழியர்களை பழைய ஓய்வூதியத் திட்டத்திலேயே வைத்துக்கொள்வதைச் சட்டம் எந்த வகையிலும் தடுக்கவில்லை.
எனவே, இந்தச் சட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு நேரடியாகப் பொருந்தும். ஆனால், மாநில அரசு ஊழியர்களுக்கோ வேறு தனியார், பொதுத்துறை அமைப்புகளுக்கோ நேரடியாகப் பொருந்தாது, கட்டுப்படுத்தாது என்பதுதான் உண்மையான நிலை.
தமிழகத்தால் முடியும்
பல மாநிலங்களில் நவம்பர் 2015 வரை 28 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேற்குவங்கத்தில் திரிணமூல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பழைய ஓய்வூதியத் திட்டமே நீடிக்கிறது. திரிபுராவும் அப்படியே. இந்த மாநிலங்களில் பழைய திட்டம் தொடர்வதை மத்திய சட்டம் எந்த வகையிலும் தடுக்கவில்லை.
எனவே, தமிழக அரசு உண்மையாகவே விரும்பினால், ஒரு மறு அறிவிக்கையை வெளியிட்டு, அனைத்து அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்குத் திரும்பக் கொண்டுவர முடியும். மொத்த அரசு ஊழியர் ஆசிரியர்கள் என்ணிக்கையில் 60% பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுவிட்டனர். மீதியுள்ளோர் பழைய ஓய்வூதிய திட்டத்திலேயே நீடிக்கின்றனர்.
புதிய ஓய்வூதிய சட்டத்தில் இணைந்த ஊழியர்களின் பணம் ரூ.4,661 கோடி. அரசின் பங்களிப்பு ரூ.3,791 கோடி. மொத்தம் ரூ.8452 கோடி. இந்த தொகையை மாநிலத்தை ஆண்ட திமுக, அதிமுக அரசுகள் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்துக்கு பங்குச் சந்தையிலும் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்ய கடந்த 12 ஆண்டுகளாக அனுப்பிவைக்கவில்லை. இந்தக் காலத்தில் 3,404 பேர் ஓய்வுபெற்றுள்ளனர். 1,890 பேர் இறந்துள்ளனர். அவர்களுக்கு எந்தப் பணமும் தரப்படவில்லை.
விருப்பம் இல்லையா?
மத்திய அரசுக்கு அனுப்பிவைக்காத அந்தத் தொகை மாநில அரசின் கையில் இருக்கிறது. அரசு விரும்பினால், தன் பங்களிப்புத் தொகையான ரூ.3,797 கோடியை எடுத்துக்கொள்ளலாம். மீதியை அரசு ஊழியர்களின் சேமநல நிதியில் சேர்க்கலாம்.
புதிய ஓய்வூதியத்துக்கான சட்டம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வந்தபோது, இடதுசாரிகளுடன் இணைந்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தார்கள். திமுக உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர். இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்வோம் என்று 2011 சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தின் கடைசி நாளன்று ஜெயலலிதா சென்னையில் அறிவித்தார். ஆனால், இப்போது அதிமுக அமைச்சர் ‘‘இது மத்திய சட்டம். அதனைத் திரும்பப் பெற மாநில அரசால் முடியாது’’ என்று கூறுவது இந்த விஷயத்தில் அரசுக்கு விருப்பம் இல்லை என்பதையே காட்டுகிறது.
சமீபத்தில் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது. 3 லட்சம் கோடி ரூபாய்களுக்கும் மேலான முதலீட்டாளர்களின் பணம் பறிபோனது. இத்தகைய நிலையில்லாத, சூதாட்டம் போன்ற பங்குச் சந்தை விளையாட்டுகளில் ஊழியர்களின் வாழ்நாள் சேமிப்பைப் போட்டு அரசு விளையாட வேண்டாம் என்றுதான் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். அதை நிறைவேற்றுவதே சிறந்த தீர்வு.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் மாணவர்கள் விடைத்தாளில் எழுதிய எல்லா விடைகளையும் அடித்தால் தண்டனை; அரசு தேர்வுத்துறை புதிய உத்தரவு

10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் விடைத்தாளில், எழுதியவிடைகள் அனைத்தையும் கோடிட்டு அடித்தால் அவர்கள் 2 பருவங்களுக்கு தேர்வு எழுத முடியாது என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
                நன்றாக படிக்கும் மாணவர்கள் சிலர் தவறாக சில விடைகளை எழுதியதாக தெரிந்துவிட்டால், சரியான விடைகள் அனைத்தையும் அடித்துவிட்டு, அந்த தேர்வில் மதிப்பெண் எதுவும் எடுக்காமல் சிறப்பு உடனடித்தேர்வை எழுதுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தடுக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன்தமிழ்நாடு முழுவதும் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். அதில் மாணவ- மாணவியர் விடைத்தாளில் தாம் எழுதிய அனைத்து விடைகளையும் தாமே முழுவதுமாக கோடிட்டு அடிக்கும் செயல், இனி ஒழுங்கீனச்செயலாக கருதப்படும் என தெரிவித்தார். மேலும் அவ்வாறு விடைத்தாளில் விடைகளை அடிக்கும் மாணவ- மாணவிகள் அடுத்து வரும் 2 பருவங்களிலும் தேர்வு எழுத முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Wednesday 17 February 2016

பிளஸ் 2 தேர்வு இருவித விடைத்தாள் வழங்க திட்டம் - நாளிதழ் செய்தி

பிளஸ் 2 பொதுத்தேர்வில், கோடிட்டவை, கோடிடப்படாதவை என, இருவிதமான விடைத்தாள்கள் வழங்கப்பட உள்ளன. அனைத்து பாடங்களுக்கும், நான்கு பக்கங்கள் மட்டுமே, கூடுதல் விடைத்தாளாகவும் வழங்கப்பட உள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 4ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. விடைத்தாள்கள் மற்றும் மாணவர்களின் புகைப்படம் அடங்கிய, பார்கோடு உடைய முகப்பு தாள்கள், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட உள்ளன.
இதன்படி,
நான்கு பக்க விடைத் தாள் மட்டுமே, முதன்மை விடைத்தாளுடன் கூடுதல் பக்கமாக வழங்கப்படும்
முதன்மை விடைத்தாளாக, மொழிப் பாடங்களுக்கு, கோடிட்ட விடைத்தாள்கள், 30 பக்கங்கள் வழங்கப்படும்
முக்கிய பாடங்களானஉயிரியல், தாவரவியல், தலா 22; கணினி அறிவியல், 30; கணக்கு பதிவியலுக்கு, 46 பக்கங்கள் என, கோடிடப்படாத விடைத் தாள் வழங்கப்படும்
கணக்கு பதிவியலில், ௧ - 16 பக்கங்கள் கோடிடப்படாமலும்; மீதமுள்ள பக்கங்கள், கணக்கு பதிவியலுக்கான குறுக்கு கோடிட்ட பக்கங்களாகவும் இருக்கும்
மற்ற பாடங்களுக்கு, 38 பக்கங்கள் கோடிடப்படாத விடைத்தாள்கள் தரப்படும்.
அரை மதிப்பெண் உண்டு
இந்த ஆண்டு முதல், அரை மதிப்பெண் வழங்க, முகப்பு தாளில், திருத்த பக்கத்தில் தனி இடம் ஒதுக்கப்படுகிறது. முந்தைய ஆண்டுகளில், இரண்டு அரை மதிப்பெண்களை, ஒரு மதிப்பெண்ணாக கணக்கிட்டு பட்டியலில் கொடுத்தனர். இந்த முறை, அரை மதிப்பெண்ணை, தனியாகவே விடை திருத்த பட்டியலில் தர வசதி செய்யப்பட்டு உள்ளது.

Tuesday 16 February 2016

மதுரை முதன்மைக்கல்வி அலுவலரை சந்தித்து தேர்வு சம்மந்தமான கோரிக்கைகள் பேசப்பட்டதின் விவரம்

இன்று நமது அமைப்பின் சார்பில் மாவட்ட பொறுப்பாளர்கள் மதுரை முதன்மைக்கல்வி அலுவலரை சந்தித்து பின்வரும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
1.செய்முறைத்தேர்வுக்கான உழைப்பூதியம் வழங்கப்படவேண்டும் கடந்த ஆண்டு 41 பள்ளிகளுக்கு நிலுவையில் உள்ளது அதையும் உடனே வழங்க வேண்டும் என கேட்டுகொள்ளப்பட்டது.
வரும் திங்கள்கிழமைக்குள் வழங்குவதாக  உறுதிஅளித்தார்.

2.தனியார்பள்ளி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கு  உதவி துறைஅலுவலர்  பணி தற்போது இல்லாததால் பறக்கும் படையில் நியமிக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. 
ஆவன செய்வதாக உறுதி அளித்தார்.

3.உடல்நலக்குறைவு உள்ள ஆசிரியர்களுக்கும்,+2 தேர்வு எழுதும் மாணவர் பெற்றோர் பெண்ணாசிரியர் தோழிகளுக்கு தேர்வுப்பணியில் விலக்கு அளிக்கவேண்டும் என வேண்டப்பட்டது.
உரிய பரிசிலனையில் செய்து  தகுதி உள்ளவர்களுக்கு விலக்கு அளிப்பதாக தெரிவித்தார்.

4.முழுமையான  வசதிகள் உள்ள தேர்வுதிருத்தும் மையங்கள் அமைக்கப்படவேண்டும்  என கேட்டுகொள்ளப்பட்டது.

5.மேலூர்,உசிலை கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இருப்பிடம் சார்ந்து தேர்வுப்பணிகள் நிர்ணயிக்கப்படவேண்டும் என கேட்டுகொள்ளப்பட்டது.
மாவட்ட கல்வி அதிகாரிகளிடம்  தெரிவிப்பதாக கூறினார்.

பின்னர்  மாவட்ட கல்வி அதிகாரிகளையும் சந்தித்து இதே கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

6.ஒவ்வொரு ஆண்டும் உசிலை கல்வி மாவட்டத்தில் பறக்கும்படை பணிபுரிவர்களுக்கு உழைப்பூதியம் தாமதமாக வழங்கப்படுகிறது என்பதை உசிலை  மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் சுட்டிகாட்டப்பட்டது. இந்த ஆண்டு விரைவில் கிடைக்க ஏற்பாடுகள் செய்வதாக உறுதியளித்தார்.

மொத்தத்தில் முதுகலை ஆசிரியர்களுக்கு என்றும் உறுதுணையாய் இருப்பது TNHSPGTA  அமைப்புதான். அமைப்பின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.

Monday 15 February 2016

14.02.16 அன்று பெரம்பலூரில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டம் செய்திகள்





தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று 14.02.16 ஞாயிறு பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நம் மாநிலத் தலைவர் முனைவர் திரு. வே.மணிவாசகன் அவர்கள் ஜாக்டோவை பலப்படுத்துதல்,மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் பல்வேறு பிரச்சினைகள்,அமைப்பின் தற்போதைய செயல்பாடு, எதிர்கால செயல்பாடு,+2பொதுத்தேர்வு உழைப்பூதியம்,விடைத்தாள் மதிப்பீட்டு ஊதியம் உயர்த்துதல்,அதற்கு அமைப்பு முன் எடுக்க வேண்டிய செயல்பாடுகள் பற்றி விரிவாக விளக்கினார்.
அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை எடுத்து உரைத்தனர்.
நம் மாநிலத் தலைவரின் சிறப்பான உரை புதிய உத்வேகத்தைத் தந்தது.பின் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது

Tuesday 9 February 2016

JACTTO உயர்மட்ட உறுப்பினர்கள் தங்கள் 15 அம்ச கோரிக்கைகளை விரிவாக பேச்சுவார்த்தையில் தெரிவித்தனர் ஜாக்டோவின் கோரிக்கைகள் குறித்து முதல்வருக்கு தெரியப்படுத்துவதாகவும், பட்ஜெட்டில் பரிசீலிக்க வாய்புள்ளதாகவும் அரசு தரப்பில் தகவல்.

மாலை 5.50க்கு அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தை ஜேக்டோ உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் 22 பேர் கலந்துக் கொண்டனர்.அதில் அவர்கள் - 15 அம்ச கோரிக்கைகள் குறித்து விளக்கமாகவும் விவரமாகவும் எடுத்துரைத்தனர். பேச்சுவார்த்தையில் பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. பன்னீர் செல்வம் அவர்கள் மின்சாரத்துறை அமைச்சர் திரு.நத்தம் விஸ்வநாதன் அவர்கள், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. வீரமணி அவர்கள் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் திருமதி.சபிதா அவர்கள், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் திரு.கண்ணப்பன் அவர்கள், தொடக்கக்கல்வி இயக்குனர் திரு.இளங்கோவன் ஆகியோர் அரசு சார்பில் பங்கேற்றனர்.
ஜாக்டோவின் கோரிக்கைகள் முதல்வர் பரிசீலித்து பட்ஜெட்டில் அறிவிப்பார் என அமைச்சர்கள் குழு உறுதிமொழி; இதையடுத்து அடுத்த கட்ட முடிவு குறித்து பிப்ரவரி 16 அன்று கூட ஜாக்டோ முடிவு
அரசு தரப்பில் கூறப்பட்டுள்ள உறுதிமொழிக்கேற்ப தமிழக அரசின் பட்ஜெட் உரையில் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என ஜாக்டோ நம்பிக்கை வைக்கிறது, பட்ஜெட்டில் கோரிக்கைகள் இடம் பெறவில்லை எனில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து பிப்ரவரி 16ந்தேதி அறிவிக்கப்படும் என ஜாக்டோ உயர்மட்டக்குழு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜாக்டோ செய்தி: 9/2/16 அவசர கூட்ட முடிவுகள் இன்று காலை 11 மணியளவில் சென்னையில் கூடிய ஜாக்டோ கூட்டம் கீழ்க்கண்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

9/2/16 அவசர கூட்ட முடிவுகள் இன்று காலை 11 மணியளவில் சென்னையில் கூடிய ஜாக்டோ கூட்டம் எக்மோரில் உள்ள  நமது அமைப்பின் கட்டிடத்தில் நடைபெற்றது.கீழ்க்கண்ட முக்கிய முடிவுகள்  எடுக்கப்பட்டன. நமது அமைப்பின் சார்பாக மாநில பொதுச்செயலாளர் திரு. இரா.பிரபாகரன் கலந்துகொண்டார் .
1. இன்று மாலை 4 மணிக்கு நடத்தப்பட விருக்கும் பேச்சு வார்த்தையில் ஜாக்டோ சார்பாக 21 பிரதிநிதிகள் அனுமதிக்கப்படவேண்டும்.
(முன்னதாக  ஜாக்டோ 5 நபர்களுக்கு மட்டுமே பேச்சுவார்த்தைக்கு அனுமதிக்கப்படுவர் என்றும் , பின்னர் 10 பேர் வரலாம் எனவும் தகவல்  அரசு சார்பில் தரப்பட்டது)
காலை கூடிய ஜாக்டோ குழுவின் முடிவின்படி ஜாக்டோ சார்பாக
திரு.முத்துசாமி,
திரு.ரெங்கராஜன்,
திரு.தியேடர் ராபின்சன்,
திரு.முருகேசன்,
திரு.சாமி சத்தியமூர்த்தி,
திரு.இளங்கோவன் ஆகியோர் கொண்ட தூதுக்குழு தலைமைசெயலகம் சென்று  பேச்சுவார்த்தைக்குப்பின் 21 சங்க பிரதிநிதிகள் அனுமதிக்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
2. ஜாக்டோ தவிர பிற சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படக்கூடாது
( ஜாக்டா, ஜக்கோட்டா போன்றன)
அழைக்கப்பட்டாலுல் ஒன்றாக அமரவைத்து பேசக்கூடாது
3.ஜாக்டோ வின் 15 அம்ச கோரிக்கைகளும் முழுமையாக நிறைவேற்றப்பட அரசினை நிர்பந்திப்பது.
இல்லையேல் ஜாக்டோ இன்று மாலையே கூடி அடுத்தகட்ட போராட்டத்தை அறிவிப்பது ஆகிய 3 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

செய்முறைத்தேர்வு படிவங்கள் 2016

Monday 8 February 2016

தமிழக அமைச்சர்கள் குழு மற்றும் தலைமை செயலாளருடனான பேச்சுவார்த்தைக்கு, ஜாக்டோ பிரதிநிதிகள் அழைப்பு

ஜேக்டோ உயர்மட்டக்குழுவிற்கு பேச்சு வார்த்தைக்கு வருமாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அழைப்பு - 5 அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தைஜேக்டோ உயர்மட்டக்குழு உறுப்பினர்களுக்கு - 15 அம்ச கோரிக்கைகள்குறித்து பேசிட. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த சந்திப்பு நாளை (09.02.2016) மாலை நடைபெறுகிறது.பேச்சுவார்த்தையில் பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. பன்னீர் செல்வம் அவர்கள் மின்சாரத்துறை  அமைச்சர் திரு.நத்தம் விஸ்வநாதன்அவர்கள், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. வீரமணி அவர்கள் உள்ளிட்ட  5 அமைச்சர்கள் தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை முதன்மை  செயலாளர் திருமதி.சபிதாஅவர்கள், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் திரு.கண்ணப்பன் அவர்கள், தொடக்கக்கல்வி இயக்குனர் திரு.இளங்கோவன்ஆகியோர் அரசு சார்பில் பங்கேற்கின்றனர்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு இன்று துவங்குகிறது

தமிழகம் முழுவதும் மாநில அரசின் பாடத் திட்டத்தின் கீழ், பயிலும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு மார்ச் 5ம் தேதி அரசு பொதுத் தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வை 8 லட்சத்து 80 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.முதற் கட்டமாக, பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு இன்று துவங்குகிறது. தமிழகம் முழுவதும் 2 பிரிவுகளாக செய்முறைதேர்வு 2 வாரம் நடக்கிறது. அதாவது சில பள்ளிகளுக்கு இன்று (பிப்.8) முதல் பிப்.20ம் தேதி வரை நடக்கிறது. செய்முறை தேர்வில் மாணவ, மாணவிகளின் செயல்முறை பதிவேடு நோட்டு புத்தகம் அடிப்படையிலும், ஆய்வகத்தில் நேரடி செய்முறை பயிற்சியின் அடிப்படையிலும் மார்க் வழங்கப்படும். ஆய்வகங்களுக்கு, வெவ்வேறு பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள், கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். எவ்வித புகரும் எழாதபடி கவனமுடன் பணியாற்றுமாறு முதுகலை ஆசிரியர்களை நமது அமைப்பு கேட்டுக்கொள்கிறது

Sunday 7 February 2016

பிப். 10ல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்


பேச்சுவார்த்தைக்கு கூட அரசு அழைக்காததால், திட்டமிட்டபடி, பிப்., 10 முதல் காலவரையற்ற போராட்டம் நடக்கும்,'' என, மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில செயலாளர் செல்வம் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:''புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா கடந்த சட்டசபை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தார். அதை நிறைவேற்றக் கோரி தான் போராடி வருகிறோம்.
கடந்த ஜன., 21ல் சென்னையில் முதல்வரை சந்திக்க போராடினோம்.தலைமை செயலாளரை மட்டுமே சந்திக்க முடிந்தது. அவரும் முதல்வரை சந்தித்து பேச வைப்பதாக கூறியும் நடவடிக்கை இல்லை. கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தைக்கு கூட அரசு அழைக்கவில்லை. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கூட புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய எதிர்பார்க்கின்றனர். புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு பிறகு 1,890 ஊழியர்கள் இறந்து விட்டனர். 3,450 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். ஆனாலும் புதிய ஓய்வூதிய திட்ட பயன்கள் அவர்களை சேரவில்லை.
புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்கள் மற்றும் அரசு பங்களிப்பு ரூ.12 ஆயிரம் கோடி சேர்ந்துள்ளது. மாநிலத்தில் நான்கு லட்சம் காலிபணியிடங்கள் உள்ளன. ஊழியர்கள் பணிச் சுமையில் உள்ளனர்.எனவே திட்டமிட்டபடி பிப்., 10ல் காலவரையற்ற போராட்டம்துவங்கும். அனைத்து துறைகளை சேர்ந்த லட்சக்கணக்கான ஊழியர்களும் பங்கேற்கின்றனர். ஆசிரியர்களும் பங்கேற்க வாய்ப்புள்ளது, என்றார்.

Saturday 6 February 2016

மதுரை முதன்மைக்கல்வி அலுவலருடன் சந்திப்பு

நமது அமைப்பின் சார்பில் மதுரை முதன்மைக்கல்வி அலுவலரை சந்தித்து இந்த ஆண்டுக்கான செய்முறைத்தேர்வுக்கான உழைப்புதியம்  வழங்க ஏற்பாடு செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது.
கடந்த ஆண்டு நடந்த செய்முறைத்தேர்வுக்கு இன்னும் 41பள்ளிகளுக்கு செய்முறைத்தேர்வுக்கான உழைப்புதியம் வழங்கப்படவில்லை என்பதும். செய்முறைத்தேர்வுகளுக்கான புறத்தேர்வாளர் பணி நியமிக்கப்பட்டதில்  குறைபாடுகள் பற்றியும்  சுட்டிக்காட்டப்பட்டது. உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக முதன்மைக்கல்வி அலுவலர் தெரிவித்தார்

29 தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு

அரசு உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 29 பேர் பதவி உயர்வு பெற்று மாவட்ட கல்வி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்களும், நியமிக்கப்பட்ட பதவி மற்றும் ஊர் விவரம் வருமாறு:
 

Tuesday 2 February 2016

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்: தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் ஆசிரியர்கள் கைதாகி விடுதலை-செய்தி தி இந்து நாளிதழ்

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ சார்பில் ஆசிரியர்கள் இன்று 3-வது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி, தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
முன்னதாக, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ மாநில தொடர்பாளர் பி.இளங்கோவன் அறிவித்தார். அதற்குப் பிறகும் அரசு ஆசிரியர் சங்க நிர்வாகிகளை பேச்சு வார்த்தைக்கு அழைக்காததால் ஏற்கெனவே அறிவித்த படி 30-ம் தேதி முதல் 1-ம் தேதி வரை 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. கடைசி நாளான இன்றும் மாவட்ட அளவில் ஆங்காங்கே மறியல் போராட்டம் நடந்தது.
சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே இன்று காலை 11 மணியளவில் போராட்டம் நடந்தது. ஜாக்டோ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்-இயக்குநர் சங்க மாநிலத் தலைவருமான எஸ்.சங்கரப்பெருமாள் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் திடீரென சாலையில் உட்கார்ந்து கோஷமிடத் தொடங்கினர். தொடர்ந்து, அவர்கள் கோட்டை நோக்கி பேரணியாக செல்ல முயன்றபோது அவர்களை போலீஸார் கைதுசெய்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
ஜாக்டோ சார்பில் மாநிலம் முழுவதும் இன்று நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

Monday 1 February 2016

ஜாக்டோ மறியல் போராட்டம் இரண்டாம் மற்றும் முன்றாம் நாள் போராட்டம்






மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். 6–வது ஊதியக்குழுவில் உள்ள குறைகளை களைய வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ) சார்பில் 3 நாட்கள் தொடர்மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த 30–ந்தேதி முதல் மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆசிரியர் இயக்க கூட்டு நடவடிக்கை சார்பில் போராட்டம் நடைபெற்றது. முதல் நாள் போராட்டத்தில் சுமார் 800–க்கும் மேற்பட்டோரும், 2–வது நாளான நேற்று 540–பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் 3–வது நாளான இன்றும் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆசிரிய–ஆசிரியைகள் நமது அமைப்பின் மாநில பொதுச்செயலாளர்இரா.பிரபாகரன் ,மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் சுரேஷ் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதையடுத்து போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட சுமார் 2,200 பேரை போலீசார் கைது செய்தனர்