news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Thursday 28 September 2017

மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை ஆய்வு செய்தல்- புதிய நடைமுறை...அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு



7வது ஊதியக்குழு பரிந்துரையை அரசாணையாக உடனே வெளியிடாவிட்டால் போராட்டம்: ஜாக்டோ-ஜியோ கிராப் அணி அறிவிப்பு

ஏழாவது ஊதியக் குழுவின்  பரிந்துரையை அரசாணையாக வெளியிடாவிட்டால் நவம்பர் 30ம் தேதிக்கு பிறகு போராட்டம் நடத்துவது என்று கணேசன் தலைமையிலான ஜாக்டோ-ஜியோ கிராப்  அணி அறிவித்துள்ளது. 

ஜாக்டோ-ஜியோ கிராப் அமைப்பின் செயற்குழு கூட்டம் சென்னையில் பெல்ஸ் சாலையில் உள்ள தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில் 20க்கும் மேற்பட்ட சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். சுமார் 2 மணி நேரம் நடந்த கூட்டத்தின் இறுதியில் கிராப் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கணேசன் கூறியதாவது:
ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் நடந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்காமல் அக்டோபர் 15ம் தேதி வரை தற்காலிகமாக நாங்கள் போராட்டத்தை ஒத்தி வைத்தோம். 
அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளித்ததால் காத்திருந்தோம். இன்று 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையை அந்த குழு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்துள்ளது. மேலும், தமிழக முதல்வர் உடனடியாக புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அதை வலியுறுத்தி வரும் நவம்பர் 18ம் தேதி திருச்சியில் மாநாடு நடத்தப்படும். முன்னதாக அக்டோபர் 28ம் தேதி முதல் மாவட்டந்தோறும் ஆயத்த கூட்டங்கள் நடத்துவது, பழைய ஓய்வு ஊதிய திட்டம் குறித்து விளக்க கூட்டம் நடத்தப்படும். 
முதல்வர் எங்களுக்கு ஏற்கெனவே தெரிவித்தபடி 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்துவது தொடர்பாக அரசாணை வெளியிட வேண்டும். நவம்பர் 30ம் தேதிக்கு பிறகு அந்த பரிந்துரை அமல்படுத்தவில்லை என்றால் ஜாக்டோ-ஜியோ கிராப் சார்பில் போராட்டம் நடத்துவது  குறித்து அறிவிப்பது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள் என்றார். 




மத்திய அரசின் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பான அலுவலர் குழுவின் அறிக்கை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்ப்பிக்கப்பட்டது

மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை பின்பற்றி, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 8-வது ஊதியக் குழுவை அமல்படுத்த அமைக்கப்பட்ட நிபுணர் குழு, முதல்வர் கே.பழனிசாமியிடம் நேற்று அறிக்கையை வழங்கியது.
நாட்டில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஊதியக்குழு பரிந்துரைப்படி, அரசு ஊழியர்களின் ஊதியம் மாற்றி அமைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில், கடந்த ஆண்டு மத்திய அரசு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தியது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் புதிய ஊதிய விகிதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்டது.
மத்திய அரசின் 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தும்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏற்படும் ஊதிய முரண்பாடுகளை களையும் விதமாக, அவர்களின் கருத்துகளை கேட்டு அரசுக்கு பரிந்துரைக்க நிதித்துறை செயலர் கே.சண்முகம் தலைமையில் நிபுணர் குழுவை தமிழக அரசு கடந்த ஏப்ரலில் அமைத்தது.

ஜாக்டோ-ஜியோ போராட்டம்

இந்தக் குழு முதலில் அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களை அழைத்து அவர்களின் கோரிக்கைகளை பெற்றது. அதன்பின், தொடர்ந்து, பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியது. இருப்பினும் நிபுணர் குழுவின் அறிக்கை அளிப்பது தாமதமாகி வந்தது. இதையடுத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை தொடங்கியது. அமைச்சர்கள் குழுவினர், ஜாக்டோ -ஜியோ நிர்வாகிகளிடம் பேசினர். தொடர்ந்து முதல்வர் பழனிசாமியும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஊதியக்குழு பரிந்துரைகளை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் பெற்று அமல்படுத்துவதாகவும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது தொடர்பான குழு பரிந்துரையை நவம்பர் 30-க்குள் பெற்று நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதை ஜாக்டோ- ஜியோவின் ஒரு பிரிவினர் ஏற்றுக்கொண்டு போராட்டத்தை அக்டோபர் 15-க்கு தள்ளி வைத்தனர். மற்றொரு பிரிவினர் கடந்த 11-ம் தேதி முதல் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, போராட்டத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து ஜாக்டோ- ஜியோவின் ஒரு பிரிவினர் தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைத்தனர். அதன்பின், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகி தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவித்தார். அப்போது, அக்டோபர் 13-ம் தேதிக்குள் ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ஊதியக்குழு தொடர்பாக அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவரும் நிதித் துறை செயலருமான கே.சண்முகம், 7- வது ஊதியக்குழு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை முதல்வர் பழனிசாமியிடம் தலைமைச் செயலகத்தில் நேற்று சமர்ப்பித்தார். அப்போது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் உடனிருந்தனர். ஏற்கெனவே நீதிமன்றத்தில் தெரிவித்தபடி, செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நிபுணர் குழுவின் பரிந்துரைகளை தமிழக அரசு அமல்படுத்தும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

வரவேற்பு

நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதற்கு ஜாக்டோ - ஜியோ கிராப் அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று நடந்த இந்த அமைப்பின் கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், உத்தரவாதம் அளித்தவாறு செப்.30-ம் தேதிக்குள் 7-வது ஊதியக்குழு அறிக்கையை அளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அதேபோல பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை நவம்பர் 30-க்குள் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தாவிட்டால் 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
இடைக்கால நிவாரணம்?

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக அலுவலர் குழுவால் அளிக்கப்பட்ட அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க சிறிது காலம் ஆகும் என்று தெரிகிறது. எனவே இடைக்கால நிவாரணமாக அடிப்படை ஊதியத்தில் 20 சதவீத தொகையை வழங்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும் அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்துவது குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதரின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் அறிக்கை வரும் நவம்பர் மாத இறுதிக்குள் அளிக்கப்படவுள்ளது. அந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அரசு உரிய முடிவுகளை எடுக்கும் என்று தெரிகிறது. 

வெற்றுச் செலவல்ல ஓய்வூதியம்! -இந்து நாளிதழிருந்து

அரசின் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசு ஊழியர்களின் பங்களிப்புகள் அளப்பரியவை. ஆட்சியாளர்களுக்குத் தேவைப்படும் ஆலோசனைகள், கருத்துகள், செயல்திட்டங்கள் போன்றவற்றைப் பலவகையிலும் ஆராய்ந்து, அவை அரசின் கொள்கைகளாகவும் திட்டங்களாகவும் வடிவம் கொடுப்பதில் ஊழியர்களின் இரவு பகல் பாரா உழைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. தேர்தல் காலம், பேரிடர் காலம், நிவாரண உதவிகள் அளித்தல், தேர்வுக்கான தயாரிப்பு மற்றும் திருத்தும் பணிகள் முதலானவற்றின்போது அந்தந்தத் துறைகள் சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியிருக்கிறது. பச்சிளங்குழந்தைக்குப் பாலூட்டவோ சோறூட்டவோ இயலாமல் நெரிகட்டிக்கொண்டு தவிக்கும் பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியைகளின் அவலப்பாடுகள் சொல்லி மாளாதவை.
ஊதியம் வழங்கல் என்பது உழைப்பிற்கானது என வரிந்து கட்டிப் பேசுவதில் பயனில்லை. உழைப்பிற்கு உரிய நியாயமான ஊதியத்திற்கான போராட்டமானது அனைத்து நிலைகளிலும் தொன்றுதொட்டு நடந்து வரும் துர்ப்பாக்கிய நிலையேதான் இங்கும் உள்ளது. அப்படியிருக்கும்பட்சத்தில், மிகையான உழைப்பிற்கான ஊதியத்தைக் கோருவதென்பது இயலாத ஒன்றாக உள்ளது. இக்கோரிக்கையானது ஆட்சியாளர்களும் பொதுமக்களும் ஆகப் பெரிய சமூகக் குற்றமாகப் பார்க்கப்பட்டுப் பரப்புரை செய்யப்படும் நிலையை என்னவென்பது?

அரசு ஊழியர்களும் தொழிலாளர்களே

அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஏனையோரைப் போன்றே வாழக் கடன்பட்டவர்கள். பன்னாட்டுத் தொழிலாளர்கள் அமைப்பு பரிந்துரைக்கும் ஊதியம் மற்றும் விடுப்புகள் சார்ந்த எல்லாவித உரிமைகளுக்கும் உட்பட்டவர்கள். இவர்கள் யாவரும் தமக்குத் தாமே ஊதியங்களை நிர்ணயம் செய்து கொள்ளும் அதிகாரம் படைத்தவர்களும் அல்லர். நாட்டின் நிதிநிலைமைகளைக் கருத்தில் கொண்டு மனத்தளவில் ஒப்புக்கொண்டாலும்கூட, நியாயத்திற்கு சற்றும் பொருந்தாதவகையில் பரிந்துரைக்கப்படும் ஊதியக்குழுவின் அறிக்கையிலும் ஆயிரம் குளறுபடிகள்!
இந்த நிலையில் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதன்பின் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் பெறுவதற்கு பல கட்டப் போராட்டங்களையும் இழப்புகளையும் எதிர்கொண்டாலும் உரிய நியாயங்கள் இதுவரையிலும் கிடைக்கவில்லை.
ஊதிய முரண்பாடுகளும் வேறுபாடுகளும் சுரண்டப்படும் உழைப்பின் வலிகளையும் வேதனைகளையும் வெளிப்படுத்துவனவாக உள்ளன. இவையே ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களைப் போராட்டக் களத்திற்கு இட்டுச் செல்கின்றன. மக்களையோ மாணவர்களையோ பாதிக்கச் செய்வது இத்தகையோரின் நோக்கமல்ல.

புதிய ஓய்வூதியத் திட்டம்

அரசு ஊழியர்கள் அநீதிக்குள்ளாக்கப்பட்ட நியாயங்களை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டித் தக்க நீதியை நிலைநாட்டிடவே அறவழிப் போராட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. பணிக்காலத்தில் மாத ஊதியம் மற்றும் இதர ஊதியப் பணப்பலன்களும் பணிநிறைவுக்குப் பிறகு ஓய்வூதியம் பெற ஒவ்வொரு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தகுதியுடையவராவர்.
காலப்போக்கில் உலகமயம், தாராளமயம் மற்றும் உலக வங்கியின் நிர்ப்பந்தம் காரணமாக இந்த அடிப்படை உரிமை பறிபோனது. ஆம், ஓய்வூதியம் வழங்கும் முறையில் 2003 – 2004 ஆம் ஆண்டுகளில் பழைய நடைமுறைகள் யாவும் ஒழிக்கப்பட்டு மாறாக, புதிய சீர்திருத்தங்கள் ஓய்வூதியத் திட்டத்தில் புகுத்தப்பட்டன.
குறிப்பாக, 2003 ஏப்ரல் 1 அல்லது அதற்குப் பின் தமிழக அரசுப் பணிகளில் நியமனம் பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர், பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தில் கட்டாயமாக உட்படுத்தப்பட்டனர். இவர்களிடமிருந்து புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கென பங்களிப்பாக, ஒவ்வொரு பணியாளரின் அடிப்படை ஊதியம், தர ஊதியம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றிலிருந்து 10% தொகைப் பிடித்தம் செய்யப்படுகிறது. அதேவேளையில் அரசும் அதே அளவு தொகையைச் செலுத்துவதை உறுதியளித்துள்ளது.
மேலும், மொத்தக் கூடுதல் தொகைக்கு ஆண்டுதோறும் ஏனைய ஊழியர் சேம நலநிதிக்கு வழங்கப்படும் வட்டியினைத் தந்து அரசின் கருவூலக் கணக்குத் துறை, அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தின் உதவியுடன் இதன் கணக்குகளைப் பராமரித்து வருகிறது. இத்திட்டத்தின்கீழ் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சற்றேறக்குறைய 4,62,000 பயனாளிகளாக உள்ளனர்.

மறுக்கப்படும் உரிமைகள்

இப்புதிய ஓய்வூதியத் திட்டமானது பழைய ஓய்வூதிய நடைமுறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. பணி ஓய்விற்குப் பின் ஓர் அரசு ஊழியர் பழைய ஓய்வூதியத்தின்கீழ் பெறும் அகவிலைப்படி மாற்றம் நிரம்பிய பணிக்காலத்தில் கடைசியாகப் பெற்ற அடிப்படை ஊதியத்தில் பாதியளவிலான ஓய்வூதியம், இறப்பிற்குப் பின் குடும்பத்தாருக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை, ஓய்வூதியத்தைத் தொகுத்துப் பெறும் நிகர ஊதியம் ஆகிய வசதிகள் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியருக்கும் ஆசிரியருக்கும் மறுக்கப்படுவதாக உள்ளது.
14 ஆண்டுகால தொடர் போராட்டத்தின் விளைவாக, அண்மையில்தான் தமிழக அரசின் நிதித்துறை செய்திக் குறிப்பில் 4,62,327 பேரின் பங்களிப்புத் தொகை, அரசுப் பங்களிப்புத் தொகை மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூ.18,016 கோடி ரூபாய் அரசின் பொதுக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப் பெற்றுள்ளது.
தவிர, இத்திட்டத்தின்படி பணிநிறைவு, பணிவிலகல் மற்றும் இறப்பு ஆகியவற்றினை எதிர்கொள்ளும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் மொத்தம் சேமித்த பணத்தில் 60% தொகை மட்டுமே திரும்ப வழங்கப்படும் எனவும் மீதமுள்ள 40% பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து பெறப்படும் லாபத்தொகையிலிருந்து குறிப்பிட்ட அளவிலான தொகை ஓய்வூதியமாக அளிக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது.
இதுபோன்ற நடைமுறையை மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்நோக்கி உள்ளனர். விதிவிலக்காக திரிபுரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மட்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் இன்னும் தொடர்கிறது.
அறுபது வயதை எட்டுவோர் மிச்சமுள்ள ஏனைய காலங்களில் இளம் வயதினர் போல் ஓடியாடி உழைத்திட இயலாது. புதிய திட்டத்தின்கீழ் பணி ஓய்வுப் பெற்றோரைக் கொண்டாடிடும் இனிய தருணங்கள் பழங்கதைகளாகவோ கற்பனைகளாகவோ எதிர்பார்ப்புகளாகவோ மட்டுமே இருக்கும். இப்படி கைவிடப்பட்டவர்களால் ஆயிரமாயிரம் நெஞ்சைப் பிளக்கும் கண்ணீர்க் கதைகள் ஓலமிட்டுக் காற்றில் பிசுபிசுக்கும். அரசின் நிர்வாகம் தலைசிறக்க தம் ஆயுள் முழுவதையும் அர்ப்பணித்துக்கொண்டிருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் இருண்ட வாழ்க்கைக்கு இந்த இரு அரசுகளின் கைமாறுதான் என்ன?
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அரசுக்கு உழைத்தோருக்கான வெற்றுச் செலவு அல்ல ஓய்வூதியம். மூத்த குடிமக்களை நிம்மதியாகவும் மரியாதையுடனும் வாழ வழிவகுக்கும் உபரி ஊதியம். அவ்வளவே!

Monday 25 September 2017

SCHOOL EDUCATION - NEW DEO's SELECTED LIST BY TNPSC & DISTRICTS






பொதுத்தேர்வுக்கு கூடுதலாக ஆயிரம் மையங்கள்'

 ''பொதுத்தேர்வுக்கு கூடுதலாக, 1,000 தேர்வு மையங்கள் அமைக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், கோபியில், அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, கூடுதல் மையங்கள் அமைக்கப்படும்; ௧௦ கி.மீ.,க்குள் மையங்கள் இருக்கும். அதன்படி, நடப்பாண்டில், 1,000 தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்படும். இதனால், தேர்வு சமயத்தில், மன உளைச்சல் இருக்காது. 'நீட்' தேர்வை பொருத்தவரை, தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்பது தான், மாநில அரசின் கொள்கையாக உள்ளது. மத்திய அரசின், எந்த பொதுத்தேர்வையும் சந்திக்கும் அளவுக்கு, மாணாக்கர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அடுத்த மாதம் முதல் வாரத்தில், இதற்கான பணி துவங்கும். தமிழகத்தில் கற்றல் குறைபாடு, மாணவர்களின் அச்சத்தை போக்கும் வகையில், அக்.,௧௫ முதல் வகுப்பறைகளில், பயிற்சி அளிக்கப்படும். ஐ.ஏ.எஸ்., பயிலும் மாணாக்கர்களுக்கு, தமிழகத்தில் உள்ள, 32 நுாலகங்களில், பயிற்சி அளிக்கப்படும். தற்போது, இதற்காக பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதற்காக, 2.17 கோடி ரூபாய் நிதி, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

மதுரை டி.இ.ஓ., அலுவலகத்தை பிரிப்பது எப்போது: 10 ஆண்டுகளாக கிடப்பிலுள்ளது திட்டம்

மதுரை:மதுரையில் அதிக எண்ணிக்கையில் பள்ளிகள் கொண்ட மதுரை கல்வி மாவட்டத்தை (டி.இ.ஓ.,) இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற திட்டம் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.மதுரையில் 1939ல் உருவாக்கப்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை முதன்மை கல்வி அலுவலகம், 1985ல் திண்டுக்கல், 1997ல் தேனி முதன்மை கல்வி அலுவலகங்களாக பிரிக்கப்பட்டன.
இதையடுத்து மதுரை வருவாய் கல்வி மாவட்டம் அளவில் உள்ளதை நிர்வாக வசதிக்காக 13.2.1995ல் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம், 29.8.1960ல் உசிலம்பட்டி டி.இ.ஓ., 14.9.1985ல் மேலுார் டி.இ.ஓ., மற்றும் 8.2.1995ல் மதுரை டி.இ.ஓ., அலுவலகங்களாக பிரிக்கப்பட்டன.மதுரை நகர் வளர்ச்சியடைந்ததன் காரணமாக பள்ளிகளின் எண்ணிக்கையும் அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரித்தன. தற்போது மூன்று கல்வி மாவட்டங்களில் மொத்தமுள்ள பள்ளிகளின் எண்ணிக்கையில் 50 சதவீதம் மதுரை டி.இ.ஓ.,வின் கீழ் செயல்படுகின்றன. அதாவது 534 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 220க்கும் மேற்பட்ட பள்ளிகள் மதுரை டி.இ.ஓ.,விற்கு உள்ளது.அரசு உதவிபெறும் பள்ளிகளின் எண்ணிக்கையும் இங்கு அதிகம். அதேநேரம் உசிலம்பட்டி - 121, மேலுார் -189 பள்ளிகள் உள்ளன. ஆனால் மூன்று டி.இ.ஓ., அலுவலகங்களிலும் பணியாளர்கள் ஒரே விகிதத்தில் தான் உள்ளன.
இதனால் பள்ளி ஆய்வுகள் அதிகாரிகளுக்கு சவாலாகவும், நிர்வாக ரீதியிலான பணிகள் அலுவலர்களுக்கு சுமையாகவும் உள்ளன.இதை கருத்தில் கொண்டு தான் பத்து ஆண்டுகளுக்கு முன் பாண்டுரங்கன் சி.இ.ஓ.,வாக இருந்தபோது மதுரை டி.இ.ஓ., அலுவலகத்தை இரண்டாக பிரிக்க பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "மாவட்டத்தில் 15 கல்வி ஒன்றியங்களில் பெரிய ஒன்றியங்களான அலங்காநல்லுார், வாடிப்பட்டி, திருப்பரங்குன்றம் மதுரையின் கீழ் உள்ளன. மாணவர்கள் எண்ணிக்கையும் இங்கு அதிகம். இதை இரண்டாக பிரித்தால் மட்டுமே கற்றல் கற்பித்தல், பள்ளி ஆய்வுகள் பணிகள் சீராகவும், நிர்வாக பணிகள் சிறப்பாக மேற்கொள்ள முடியும்," என்றார்.

Friday 15 September 2017

புதிய பாடத்திட்டம் நாளை முதல் ஆய்வு

தமிழக பள்ளிக்கல்வியில், புதிய பாடத்திட்டம் குறித்த வரைவு அறிக்கை தயாராகி உள்ளது. நாளை முதல், கல்வியாளர் குழு மூலம், ஆய்வு பணிகள் துவங்க உள்ளன.
பிளஸ் 2முடிக்கும் மாணவர்கள், உயர்கல்வியில் சேர, பல்வேறு நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டியுள்ளது. மருத்துவத்திற்கும், இந்தாண்டு, 'நீட்' தேர்வு கட்டாயமாகி விட்டது. தமிழக மாணவர்கள், 'நீட்' தேர்வு உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளிலும், மற்ற மாநில மாணவர்களுக்கு இணையாக, தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்காக, 14 ஆண்டுகளுக்கு பின், தமிழக பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. பாடத்திட்டத்துக்கான பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில், அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தர், அனந்தகிருஷ்ணன் தலைமையில், கல்வியாளர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர், தமிழகத்தின் பல்வேறு நகரங்களில், கருத்தறியும் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், மாணவர்களிடம் கருத்துகள் பெறப்பட்டன. இவற்றை தொகுத்து, பாடத்திட்டத்துக்கு முந்தைய கலைத்திட்ட வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது. மொத்தம், 70 பக்க கலை திட்ட வரைவு அறிக்கையை, கல்வியாளர்கள் குழு, நாளை முதல் ஆய்வு செய்ய உள்ளது. அதன்பின், இணையதளத்தில், மக்கள் பார்வைக்கு பதிவேற்றம் செய்யப்படும். பின், வரைவு அறிக்கை அடிப்படையில், பாட வாரியாக, வகுப்பு வாரியாக பாடத்திட்டம் தயாரிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tuesday 5 September 2017

‘கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே வேலைநிறுத்தத்தை கைவிடுவோம்’ ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு திட்டவட்டம்

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்கள்.

ஆலோசனை முடிந்த பின்னர், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பெ.இளங்கோவன், ஜெ.கணேசன் ஆகியோர் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-


தமிழக அரசின் முடிவு குறித்து ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழு கூடி ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையின் முடிவில், 7-ந்தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தினை மேற்கொள்வதற்கான களப்பணியினை முழு வீச்சில் மேற்கொள்வது என்றும், 7-ந்தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தினை மேற்கொள்வது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

6.9.2017(நாளை)-க்குள் எங்களுடைய கோரிக்கைகளான ஊதியக்குழுவினை அமல் படுத்துதல், இடைக்கால நிவாரணம் வழங்குதல் தொடர்பான சாதகமான முடிவுகளையும் அதோடு மட்டுமல்லாமல், பழைய ஓய்வூதியத்திட்டத்தினை தொடர்வது என தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது என்ற அறிவிப்பினை வழங்கினால் மட்டுமே, தொடர் வேலைநிறுத்தத்தினை கைவிடுவது என்று ஒருமனதாக முடிவு மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday 4 September 2017

மாநில பொதுக்குழுக்கூட்டம் 2.9.2017



ஜாக்டோ - ஜியோவுடன் அரசு தரப்பு இன்று பேச்சு

காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள, 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பினருடன், அரசு இன்று பேச்சு நடத்துகிறது.

'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளைக் களையும் வரை, 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். 'சிறப்பு காலமுறை, தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து, வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்' என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மாவட்ட தலைநகரங்களில், ஜூலை, 18ல், ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆகஸ்ட், 5ல், கோட்டையை நோக்கி பேரணியும், ஆக., 22ல், அடையாள வேலைநிறுத்தப் போராட்டமும் நடத்தினர். ஆனால், அரசு கண்டு கொள்ளாததால், வரும், 7ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்து உள்ளனர்.

வேலை நிறுத்தம் தொடர்ந்தால், அரசு பணிகள் பாதிக்கும் என்பதால், ஜாக்டோ - ஜியோ அமைப்பினருடன் பேச்சு நடத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இன்று பகல், 12:30 மணிக்கு, தலைமை செயலகத்தில், பேச்சு நடக்கிறது. இதில், அரசு தரப்பில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயகுமார், உதயகுமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். ஜாக்டோ - ஜியோ அமைப்பு நிர்வாகிகள், ஒருங்கிணைப்பாளர், கணேசன் தலைமையில் பங்கேற்கின்றனர்.

'அரசு பேச்சு நடத்த முன் வந்துள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது. இதில், நீண்ட கால பல பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது' என, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.