news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Sunday 27 November 2016

கழிப்பறை பராமரிப்பிற்கு தனியார் ஒப்பந்த ஊழியர்கள் அரசு பள்ளிகளில் ஒரு மாதத்திற்குள் நியமிக்க உத்தரவு

          தமிழகம் முழுவதும் உள்ள அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில், கழிப்பறையை சுத்தப்படுத்த, தனியார் ஒப்பந்தம் மூலம் ஒரு மாதத்திற்குள் பணியாளர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
          அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு போதிய கழிப்பறை வசதி செய்து தரவும், கழிப்பறைகளை சுத்தமாக பராமரிக்கவும், மதுரை ஐகோர்ட் கிளை, தமிழக அரசுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளது. 

இதன் எதிரொலியாக, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் பனீந்திர ரெட்டி, அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி கமிஷனர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு:
● அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை பராமரிக்க, 160.77 கோடி ரூபாய் செலவிலான திட்டத்தை, 2014 ஜூலையில், சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு, நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில், கழிப்பறைகளை சுத்தப்படுத்த, தனியாக ஒப்பந்த ஊழியர்களை பணியமர்த்த வேண்டும்
● மாநகராட்சி, நகராட்சிகளில் இந்த ஊழியர்களுக்கு சொத்து வரி வசூலில், கல்வி நிதிக்கு ஒதுக்கப்படும் தொகை மூலம் சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு, திடக்கழிவு மேலாண்மை நிதியில் இருந்து சம்பளம் வழங்க வேண்டும்
● அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை பராமரிக்கும் பொறுப்பை அந்தந்த உள்ளாட்சிகள் ஏற்க வேண்டும். இந்த பணிக்கு உள்ளாட்சிகள் தான் ஆட்களை நியமிக்க வேண்டும். பராமரிப்பு பணிகள் முறையாக நடக்கிறதா என, உள்ளாட்சி அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும்
● பள்ளி நிர்வாகங்களுடன் பேசி, காலையில் பள்ளி துவங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன், ஊழியர்கள் சென்று கழிப்பறைகளை சுத்தப்படுத்தவும், பள்ளி முடியும் நேரம் வரை அவர்கள் பணியில் இருக்கவும், மதிய உணவு இடைவேளைக்கு பிறகும் கழிப்பறையை சுத்தம் செய்யவும் அறிவுறுத்த வேண்டும்
● வகுப்பறை பராமரிப்பு, பள்ளி வளாகம் பராமரிப்பு பணிகளுக்கும் இந்த ஊழியர்களை பயன்படுத்த வேண்டும்
● அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், தினக்கூலி பணியாளர்களுக்கு நிர்ணயிக்கும் சம்பளத்தையே, இந்த ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்
● அரசு ஒப்பந்த விதிகளின் படி இந்த பணிக்கு ஆட்களை நியமிக்கும் நிறுவனங்களை தேர்வு செய்ய வேண்டும். ஒப்பந்த விதிகளுக்கு உட்பட்டு இருந்தால், மகளிர் சுய உதவிக்குழு, சமுதாய அமைப்புகளையும் இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்க அனுமதிக்கலாம்
● பள்ளி தலைமை ஆசிரியர்கள், பராமரிப்பு பணி குறித்து பதிவேடு பராமரிக்க வேண்டும். பள்ளி நிர்வாகத்திற்கு திருப்தியில்லாத பராமரிப்பு பணி ஒப்பந்ததாரரை, உடனடியாக நீக்க வேண்டும்
● பெண்கள் பள்ளியில் கட்டாயம் இரண்டு பெண் துப்புரவு பணியாளர்களும், ஆண்கள் பள்ளியில் இரண்டு ஆண் அல்லது பெண் துப்புரவு பணியாளர்களும், இருபாலரும் படிக்கும் பள்ளியில் ஒரு பெண், ஒரு ஆண் துப்புரவு பணியாளர்களும் பணியமர்த்தப்பட வேண்டும்
● பெண்கள் பள்ளியில், 'நாப்கின்'களை பாதுகாப்பாக அகற்றுவது இந்த பராமரிப்பு பணி நிறுவனத்தின் வேலையாகும்
● அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறை பராமரிப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட ஊழியர் விபரங்களை, ஒரு மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரிகள், அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

Saturday 19 November 2016

பழைய ஓய்வூதிய திட்டம் நிபுணர் குழுவின் காலம் நீட்டிப்பு

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குழுவின் காலம் டிசம்பர் 26-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான உத்தரவை நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் பிறப்பித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட உத்தரவு:- தமிழகத்தில் பழைய
ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தக் கோரிக்கை குறித்து ஆராய தமிழக அரசின் சார்பில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற ..எஸ். அதிகாரி சாந்தா ஷீலா நாயர், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அல்லது அவரால் நியமிக்கப்படும் நபர், சென்னை பொருளாதார பள்ளியின் பேராசிரியர் பிரஜேஷ் சி.புரோகித், திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறையின் முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவினர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எனப் பல்வேறு சங்கங்களின் கருத்துகளை மூன்று கட்டங்களாகக் கேட்டு அறிந்தது. இந்த கருத்துக் கேட்புக் கூட்டங்கள் கடந்த செப்டம்பர் 15, 16 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடந்தன. இந்த நிலையில், நிபுணர் குழுவின் காலம் கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதியுடன் முடிந்தது. ஆனாலும், நிபுணர் குழு தனது இறுதி செய்யப்பட்ட அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்கும் வகையில் அதனுடைய காலக்கெடு மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் டிசம்பர் 26-ஆம் தேதி வரை நிபுணர் குழு செயல்படும் என்று தனது உத்தரவில் சண்முகம் தெரிவித்துள்ளார்.

Sunday 13 November 2016

மாநில செயற்குழுக் கூட்டம் திருச்சி 13.11.16





அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள்-தமிழ் மொழி பாடத்தினை முதன்மைப்பாடமாக பயிலாமல் இதர மொழியினை முதன்மைப்பாடமாக பயின்று-தமிழ் இரண்டாம் நிலை தேர்வினை தேர்ச்சி பெறவேண்டும்

பள்ளிக்கல்வி இணை இயக்குநர் அவர்களின் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அவர்களின் ந.க.எண்.090875/சி3/இ1/2015, நாள் 24.10.2016 கடிதத்தின்படி அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு நேரடி நியமனம் செய்யப்பட்டு அந்நியமன ஆணையில் பத்தி 4ல் தேர்வாளர் உயர்நிலைப் பள்ளிப் படிப்பில் தமிழ் மொழியினை பாட மொழியாக பயிலாதவராகவோ பிற மொழிகளில் பட்டப்படிப்பில் மொழி பாடமாக பயின்றவராகவோ இருந்து தமிழ் வழி பாடத்திற்கென ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பின் இவர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குழுமத்தால் நடத்தப்படும் தமிழ் இரண்டாம் தாள் தேர்வில் பணியில் சேர்ந்த இரண்டு ஆண்டுக்குள் கண்டிப்பாக தேர்ச்சி பெற வேண்டும்

Saturday 12 November 2016

மாநிலத்தலைவர் அறிவுரை

                        அன்பிற்கினிய தோழர்களே தோழிகளே வணக்கம். தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் திருப்பூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் மட்டுமே கைபேசி பயன்பாடு பற்றி சுற்றறிக்கை அனுப்பிய மாவட்டங்கள்... வேறு எந்த மாவட்டத்திலும் இது இல்லை. கூடுதலாக நாமக்கல் மாவட்டத்தில் நாற்காலி பிரச்சனை வந்து  விட்டது...கட்செவி வந்தாலும் வந்தது நமது ஆசிரியர்கள் தினமலர் நிருபர்கள் போல் இவர்களே ஆசிரியர்களுக்கு எதிராக எதையாவது இங்கே படித்தோம்.... அங்கே கேட்டோம்.... என பதிவு செய்வதை வாடிக்கை ஆக்கிக் கொண்டார்கள். இது நல்லதல்ல... பள்ளிக்   கல்வி இயக்குநர் அவர்கள் என்ன வேண்டுமானாலும் கடிதம் எழுதலாம்.... அவைகள் எதுவும் அரசாணைகள் இல்லை. அரசாணைகளைப் பின்பற்றியே பள்ளிக் கல்வித்துறை மட்டும் அல்ல அனைத்துத் துறைகளும் இயங்குகின்றன.... அதே நேரத்தில் ஆசிரியர்களாகிய நாம் நமக்கு நாமே சில கட்டுப்பாடுகளை வகுத்துக் கொண்டு பள்ளியில் பணியாற்ற வேண்டும்... மாணவர்களைப் போல் நாமும் குட்டிச் சட்டை போட்டுக் கொள்வது, தாடி வைத்துக் கொள்வது, நீண்ட கிருதா வைத்துக் கொள்வது என பணியாற்றுவது 29 வருட அனுபவம் உள்ள ஆசிரியன் என்ற நிலையில் இவைகள் தவறு என கருதுகிறேன்... இவன் யார் இதனைச் சொல்வதற்கு என சில மேதாவிகள் நினைக்கக் கூடும்.... அதனைப் பற்றி எனக்கு வருத்தம் இல்லை.... அதே நேரத்தில் வகுப்பு அறையில் நாற்காலி போடக் கூடாது என ஒரு மாவட்டத்தில் அறிவிப்பு வந்த உடன் குய்யோ முறையோ என ஏன் கத்த வேண்டும்.... இவ்வாறு கைபேசி, நாற்காலி என வரும்போது இயக்கம் தான் உங்களின் சுயமரியாதையை காக்க  அதற்கான செயல்பாடுகளில் இறங்கி உங்களை பாதுகாக்கிறது. அந்த வகையில் நான் அறிவுறுத்தியதின் அடிப்படையில்  நாமக்கல் மாவட்டப் பொறுப்பாளர்கள் தங்கள் பணியினை செவ்வனே செய்துள்ளார்கள்... வாழ்த்துக்கள்... இதனைப் போல் சுயமரியாதை, கோரிக்கைகள் என பாதுகாக்கும் பெற்றுத் தரும் இயக்கம் TNHSPGTA மட்டுமே.... உங்களை ஏமாற்றி உறுப்பினர் சந்தா பெறும் கோயபல்ஸ்கள் இந்தப் பணிகளை 1980 முதல் எந்தக் காலத்திலும் செய்தவர்கள் அல்ல... இதனை பகுத்தறியாமல் இரட்டை உறுப்பினராக இருக்கும் நண்பர்கள் நமது அமைப்பிலே உறுப்பினராக இருக்கக் தேவையில்லை என மாநிலத் தலைமை என்ற முறையில் கேட்டுக் கொள்கிறேன்.... கூடுதலாக நான் உங்கள் அனைவரிடமும் வேண்டிக் கொள்வது வகுப்பு எடுக்கும் போது கைபேசி பயன்படுத்துவது, நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு பாடம் நடத்துவது என்பதனை அருள்கூர்ந்து தவிர்த்து விடுங்கள்.... அனைத்தையும் தெரிந்து வைத்துள்ள ( பாடத்தினை தவிர) மாணவர்கள் முன்னால் நாம் பாடம் நடத்துகிறோம் என்பதனை மட்டும் கொஞ்சம் நெஞ்சிலே நிறுத்தி பணியாற்றுங்கள்... எவ்வாறு இருந்தாலும் இடையூறு வரும்போது உங்கள் பின்னே நாங்கள் நிற்போம்.மணிவாசகன்

பிற பணிக்கு (On Duty) செல்லும் தலைமை ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடுகள்

பள்ளி வேலை நாட்களில் தலைமை ஆசிரியர்கள், பிற பணிக்காக வெளியூர் செல்ல, சி.இ.ஓ.,வின் முன்அனுமதியை பெற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.

அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களில் சிலர், பள்ளி வேலை நாட்களில், பிற பணி என்ற பெயரில், வெளியூர் செல்வதும், சொந்த பணிகளை கவனிப்பதாகவும், அரசின் கவனத்திற்கு புகார் சென்றது. இதனால், அலுவலக பணிகளுடன், மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுவதை தவிர்க்க, பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதன்படி... பள்ளி வேலை நாட்களில் தலைமை ஆசிரியர்கள், பிற பணிக்காக வெளியூர் செல்ல, சி.இ.ஓ.,வின் முன்அனுமதியை பெற வேண்டும்.
பிற பணி விவரங்களை, பள்ளியில் பராமரிக்கப்படும் நடமாடும் பதிவேட்டில் பதிய வேண்டும். இதே விவரங்களை, சி.இ.ஓ., அலுவலக நடமாடும் பதிவேட்டிலும் இடம் பெற செய்ய வேண்டும். 
சி.இ.ஓ.,க்கள் தங்களது மாவட்டத்தில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களின், பிற பணிகளை அறிந்து, தேவைப்படும் பட்சத்தில், உயரதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணத்திற்காக மட்டுமே, தலைமை ஆசிரியர்களை, சி.இ.ஓ.,க்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் நேரில் வரவழைக்க வேண்டும்.
சி.இ.ஓ., - டி.இ.ஓ., அலுவலகங்களில் தபால் கொடுத்தல் போன்ற சாதாரண பணிகளுக்கு, பள்ளி அலுவலக ஊழியர் அல்லது பணி சுமையில்லாத பிற ஆசிரியர்களை பயன்படுத்தலாம். இந்த விதிமுறைகள் அடங்கிய உத்தரவு கடிதம், பள்ளிக்கல்வித் துறை மூலம், சி.இ.ஓ., அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது

மதுரை மாவட்ட பொதுக்குழுக்கூட்டம்

மதுரை மாவட்ட பொதுக்குழுக்கூட்டம் நேற்று (11.11.2016) நடைபெற்றது . பல்வேறு  வழக்குகள்  மாநில  அமைப்பின் சார்பில்  தொடுக்கப்பட்டுள்ளதையும் அதற்கான  நிதி ஆதாரங்கள்  அளிக்கவேண்டிய  முதுகலை ஆசிரியர்களின் கடமையும்  எடுத்துக் கூறப்பட்டது . முன்னுதாரணமாக  மாவட்ட பொறுப்பாளர்கள்  தங்கள் நிதியை   மாநிலப்  பொதுச் செயலாளர்  பிரபாகரன் அவர்களிடம் அளித்தனர். பள்ளிகளில்  பெறப்பட்ட நிதியும்  அளிக்கப்பட்டது . மாவட்ட அளவில் அனைத்து பள்ளிகளுக்கும் சங்க செயல்பாடுகளை  கொண்டு செல்லவும்  முடிவெடுக்கப்பட்டது. மாநிலத் துணைத்தலைவர்  ராஜேந்திரன் அவர்கள்  மட்டும் தனிப்பட்ட முறையில் ரு, 16 ஆயிரம் அளித்தார் . அவருக்கு மாவட்டக்கழகம் சார்பில்  நன்றி தெரிவித்துகொள்ளப்படுகிறது.

நமது மாவட்ட அமைப்பு செயலாளர் திரு. முருகன் (பாலமேடு ) அவர்கள்  தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்று சென்றுள்ளதால்  அப்பொறுப்பிற்கு திரு. நவநிதகிருஷ்ணன் அ.மே.நி பள்ளி  அய்யங்கோட்டை  அவர்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாநில பொதுக்குழுவில் ஒப்புதலுக்குபின் செயல்படுவார் என்றும் தெரிவித்து கொள்ளப்படுகிறது

திருத்தப்பட்ட இரண்டாம் இடைப்பருவத்தேர்வு அட்டவணை நவம்பர் 2016


Saturday 5 November 2016

தமிழ்நாடு மேல்நிலைப்பபள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNHSPGTA) தொடுத்துள்ள வழக்குகள்

தமிழ்நாடு மேல்நிலைப்பபள்ளி   முதுநிலைப்பட்டதாரி  ஆசிரியர் கழகம்  (TNHSPGTA) தொடுத்துள்ள வழக்குகளும், அவைகளின் தற்போதைய நிலையும்

Wednesday 2 November 2016

மேல்நிலைத் துணைத் தேர்வு தனித் தேர்வர்கள் தேர்வு முடிவினை பதிவிறக்கம் செய்து கொள்ளுதல்,மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் குறித்த செய்தி குறிப்பு..



பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட வல்லுநர் குழு பதவிக்காலம் 27.10.2016 அன்று முடிவு.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு 19.02.2016 ல் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு ஒருமுறை காலநீட்டிப்பு செய்யப்பட்டது.குழுவின் பதவிக்காலம் 27.10.2016 அன்று முடிவுற்றது.அது நீட்டிப்பு செய்யப்படுமா அல்லது அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படுமாஎப்படி? எப்போது?

Tuesday 1 November 2016

தமிழில் கையெழுத்து ஆசிரியர்களுக்கு கட்டாயம்

ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள், தங்கள் பெயரையும், முன்னெழுத்தையும், கட்டாயம் தமிழில் எழுத வேண்டும்' என, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
 
           அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வித் துறை அலுவலகங்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
கல்வித் துறையில், 1978ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி, அனைத்து பணியாளர்களும், அலுவலக ஆவணங்களில், தமிழில் மட்டுமே கையெழுத்திடவேண்டும். தமிழ் வளர்ச்சித் துறை, 1998ல் பிறப்பித்த அரசாணைப்படி, 'இன்ஷியல்' என்ற முன்னெழுத்தையும், தமிழில் மட்டுமே எழுத வேண்டும்; இந்த உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிளஸ் 2வில் 100 சதவீத தேர்ச்சி : அரசு பள்ளிகளுக்கு அறிவுரை

         பிளஸ் 2 தேர்வில், 100 சதவீத தேர்ச்சி இலக்கை அடைய, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவுறுத்தி உள்ளார். 

          பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான, வினாத்தாள் தொகுப்பு பணி முடிந்துள்ள நிலையில், 100 சதவீத தேர்ச்சி இலக்கை அடைய, அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட வாரியாக அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், சில அறிவுரைகளை வழங்கி உள்ளார். அதில், 'அனைத்து அரசு பள்ளி மாணவர்களும், பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறும் வகையில், பாடங்களை முடிக்க வேண்டும். வாராந்திர தேர்வுகள் நடத்தி, மாணவர்களின் கற்றல் திறனை அறிந்து, சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற, சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும். 'பெற்றோரை அழைத்து, வீட்டில் மாணவர்களை படிக்க வைக்க அறிவுறுத்த வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.