news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Monday 30 March 2015

1.4.15 அன்று மதுரையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தின் துண்டறிக்கை



அறை கண்காணிப்பாளர்கள் மீதான பணி இடை நீக்க நடவடிக்கையை கைவிடக் கோரி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும்அனைத்து மாவட்டங்களில்முதன்மை கல்வி அலுவலகம் முன்பு 01.04.15 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் மாநிலத் தலைவர் திரு.வே.மணிவாசகன் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தென்மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்ட பொதுக்குழுக் கூட்டம் 29.3.15 அன்று நடைபெற்றது அதில் மாநிலத் தலைவர் மணிவாசகன், மாநிலப் பொதுச் செயலாளர் பிரபாகரன், மகளிரணிச் செயலாளர் முத்துக்குமாரி  ஆகியோர் பங்கேற்றனர்.
பொதுக்குழுவில் பொதுத் தேர்வின் போது மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு இடையூறாக உள்ளாடைகளை சோதித்தல் ,  நன்றாக படிக்கக்கூடிய மாணவர்களின் தேர்வு நேரத்தை வீணடித்தல் , அறை கண்காணிப்பாளர்கள் மீதான பணி இடை நீக்க நடவடிக்கை போன்ற செயல்களில் ஈடுபட்ட இணை இயக்குனர்களின் செயல்களை கண்டித்து அனைத்து  மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு  01.04.15 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது
.



Thursday 26 March 2015

பொதுத் தேர்வில் பணிபுரியும் ஆசிரியர்கள் மேல் நடவடிக்கை எடுப்பதை கண்டித்து மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தக்கோரி மாநிலத்தலைவர் மணிவாசகன் அறிக்கை

1980 முதல் +2 அரசு பொதுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. 1980-ல் 38% காக இருந்த தேர்ச்சி முடிவுகள் இன்று 90% தொட்டு விட்டது. ஆனால் தேர்வுகள் துறை ஏனோ தேவையற்ற சில கடுமையான நடவடிக்கைகளை கடந்த சில தினங்களாக ஆசிரியர்கள் மேல் எடுக்க எத்தனிக்கின்றது. இதனை எமது அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.தேர்வு நடக்கின்ற நடுவங்களுக்கு தற்போது இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள்,மாவட்டக் கல்வி அலுவலர்கள் என்ற பெயரில் வரும் பறக்கும் படைகள் மாணவர்களின் உள்ளாடைக்குள் கையை விட்டு பார்ப்பதும் மாணவிகளின் உள்ளாடைக்குள் கையை விட்டு பார்ப்பதையும் வாடிக்கையாக செய்து வருகிறார்கள்.மன அழுத்தங்களோடு தேர்வு எழுதும் மாணவனையோ அல்லது மாணவியையோ மனரீதியாகவோ அல்லது உடல்ரீதியாகவோ துன்புறுத்துவது என்பது மனித உரிமை மீறியச் செயலாகும்.பள்ளி நேரங்களில் மாணவனை கடுஞ் சொற்கள் கொண்டு திட்டிவிட்டால் விசாரணை என்றும் ஆசிரியர்கள் மேல் நடவடிக்கை என ஆட்டம் போடும் பள்ளிக் கல்வித் துறை தேர்வு நேரங்களில் குழந்தைகளை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்துவதை கண்டு கொள்ளாமல் இருப்பதை எமது அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.இதில் தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக தலையிட்டு மாணவர்களின் எதிர்காலம் காக்கப்பட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்

Saturday 21 March 2015

ஏப்ரல் 19ல் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த ஜாக்டோ முடிவு

இன்று சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ உயர்மட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் ஏப்ரல் 19ல் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம்  நடத்த ஜாக்டோ முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மார்ச்30ம் தேதி ஜாக்டோ மீண்டும் கூடவுள்ளது.

Friday 20 March 2015

மதுரையில் விடைத்தாள் திருத்தும் மையங்களில் வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும் முதன்மை கல்வி அலுவலரிடம் கோரிக்கை



19.3.15 அன்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் பிரபாகரன் மற்றும் மாவட்டத் தலைவர் சரவண முருகன் தலைமையில் மதுரை மாவட்டப் பொறுப்பாளர்கள் முதன்மைக்கல்வி அலுவலரை சந்தித்து விடைத்தாள் திருத்தும் மையங்களில் குறைபாடுகளை சுட்டிக் காட்டி சரிசெய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர். கழிப்பறை வசதி, குடிநீர் வசதி செய்து தரவேண்டும். மொழிப்பாடங்களுக்கு காலை மற்றும் மாலை நிர்ணயிக்கப்பட்ட  விடைத்தாள்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டும், முதன்மைத் தேர்வாளர் மற்றும் கூர்ந்தாய்வாளர்களுக்கு விடைத்தாள்கள் திருத்த கொடுக்கக் கூடாது என கோரிக்கை விடுத்தனர். முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி ஆவன செய்வதாக உறுதி அளித்தார்

மாவட்ட பொறுப்பாளர்கள் ரவிச்சந்திரன், வினோத், ராஜேந்திரன் துரைராஜா. ஆனந்தசகாயநாதன், சம்பத், சௌந்தரபாண்டியன், பிரபு பாலகிருஷ்ணன், விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Tuesday 17 March 2015

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும்பணி தொடங்கியது

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும்பணி நேற்று தொடங்கியது. மதிப்பீடு செய்வதில் தவறு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியரே பொறுப்பு ஏற்கவேண்டும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு கடந்த 5-ந்தேதி தொடங்கியது. தேர்வு மார்ச் 31ம் தேதி முடிவடைகிறது. மாணவ-மாணவிகளின் நலன் கருதி விடைத்தாளை விரைவாக மதிப்பீடு செய்து, அதே நேரத்தில் எந்தவித பிரச்சினையும் இன்றி, சரியான முறையில் தேர்வு முடிவை வெளியிடவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அரசு தேர்வுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி விடைத்தாள் திருத்தும் பணி தமிழ்நாடு முழுவதும் நேற்று 70 மையங்களில் தொடங்கியது. தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழித்தாள்களுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணியை நேற்று அதிகாரிகள் தொடங்கினார்கள். ஒட்டுமொத்த பணியை அரசு தேர்வு இயக்குனர் கு.தேவராஜன் கண்காணித்து வருகிறார். மதுரையில் 3 இடங்களில் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி தொடங்கப்பட்டது.
 மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மேற்பார்வையில் திருத்தும் பணி தொடங்கியது. விடைத்தாள்களை திருத்தும் போது இந்தாண்டு பல புதிய முறைகளை கடைபிடிக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் பொறுப்பு விடைத்தாள்களில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை வழக்கம் போல் இடதுபுறம் குறிக்காமல் வலதுபுறமாக குறிக்க வேண்டும். அதற்கு என தனியாக இடம் விடைத்தாள்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முகாம் அலுவலரிடம் இருந்து முதன்மை தேர்வர்கள் விடைத்தாள் கட்டுகளை பெற்றுக்கொண்டு அதற்கான ஒப்புகையினை சரிபார்த்து அளித்தல் வேண்டும். உதவித்தேர்வர்கள் விடைத்தாள் உறைகளை பெற்ற உடன் விடைத்தாள்களின் எண்ணிக்கை சரியாக உள்ளதா என்பதையும், விடைத்தாள்கள் ஒவ்வொன்றின் அனைத்து பக்கங்களும் உள்ளனவா என்று சரிபார்த்துக்கொள்ள வேண்டும். இதில் ஏதேனும் குறைகள் இருப்பின் முதன்மை தேர்வாளரின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும். அவ்வாறு கொண்டு வராவிட்டால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு உதவித்தேர்வாளரே (ஆசிரியர்கள்) முழுப்பொறுப்பேற்க நேரிடும். திருத்தப்பட்ட விடைத்தாளுக்குரிய மதிப்பெண்கள் முதன்மை விடைத்தாளின் முதல் பக்கத்தில் அதற்குரிய கட்டத்தில் பதியப்பட்டுள்ளதா என்பதை விடைத்தாள் திருத்தும் மைய அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். கூர்ந்தாய்வு அலுவலர் விடைத்தாள் களை கூர்ந்தாய்வு செய்ய மட்டுமே வேண்டும். அவர் உதவித் தேர்வாளர் அளித்த மதிப்பெண்களை குறைப்பதற்கோ அல்லது மாற்றி அமைப்பதற்கோ அதிகாரம் இல்லை. மதிப்பெண் குறைந்தாலோ அல்லது அதிமானாலோ முதன்மை தேர்வாளரின் கவனத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும். விடைத்தாளின் முதல் பக்கத்தில் வலது கை மேல்புறத்தில் உதவி தேர்வாளர், கூர்ந்தாய்வு அலுவலர், முதன்மை தேர்வாளர் கையொப்பம் இட வேண்டும். விடைத்தாளில் காணப்படும் கூட்டலில் பிழை இருந்தாலோ, மதிப்பீடு செய்யப்படாமல் விடை இருந்தாலோ அல்லது மதிப்பீடு செய்யப்பட்ட விடையின் மதிப்பெண் பதியப்படாமல் இருந்தாலோ கூர்ந்தாய்வு (ஆசிரியர்கள்) அலுவலரே முழு பொறுப்பேற்க வேண்டும். மதிப்பெண்கள் விடைத்தாளின் ‘‘பி’’ பகுதியில் மொத்த மதிப்பெண்கள் எண்ணாலும், எழுத்தாலும் எழுதப்பட வேண்டும். இந்த மதிப்பெண்களை விடைத்தாள் முகாம் அலுவலர் அன்றே கம்ப்யூட்டரில் பதிவு செய்து தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். போன்ற செயல்பாடுகள்  நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளது

Sunday 8 March 2015

தேனி மாவட்ட ஜேக்டோ கூட்டு நடவடிக்கையின் சார்பில் கவன ஈர்ப்பு பேரணியில் மாநில பொதுச் செயலாளர் இரா.பிரபாகரன் துவக்க உரை காட்சிகள்



பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜேக்டோஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கையின் சார்பில் கவன ஈர்ப்பு பேரணி

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் சார்பில்   மதுரை ராஜாமுத்தையா மன்றத்தில் 10 மணி அளவில் தொடங்கி காந்தி மியூசியத்தில் முடிவடைந்தது பேரணியில் 4000க்கும் அதிகமான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
* மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
*ஆசிரியர்கள் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், தன்பங்களிப்பு ஓய்வு ஊதியத்திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
*கடந்த, 1986-88ம் ஆண்டுஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர், 2004 -06ம் ஆண்டு வரை, தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர் ஆகியோருக்கு, பணியில் சேர்ந்த நாள் முதல், பணி வரன்முறை செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
*தொழிற்கல்வி ஆசிரியருக்கு, 50 சதவீதம் பணிக்காலத்தை ஓய்வு ஊதியத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
*அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், 30 ஆண்டாக எவ்வித பதவி உயர்வும் பெறாமல் இருக்கும் ஆசிரியருக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்குவதுபோல, ஆறு சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
*உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை, ஒன்று என்ற பதவியை உருவாக்க வேண்டும்.
*ஒவ்வொரு பதவி உயர்வுக்கும், ஆறு சதவீதம் ஊதிய உயர்வு வேண்டும். *பள்ளிகளில் சமீபகாலமாக, விரும்பத்தகாத சம்பவங்கள், ஆசிரியருக்கு எதிராக நடக்கிறது. எனவே, மருத்துவருக்கு பணியில் பாதுகாப்பு வழங்கப்படுவதுபோல், ஆசிரியருக்கும் பணி பாதுகாப்பு சட்டம் வகுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட உள்பட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்தப்பட்டது.











Saturday 7 March 2015

மார்ச் 2015 மேல்நிலைப் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முன்னர் வழங்கப்பட்ட அறிவுரைகளுக்கான திருத்தம் மற்றும் கூடுதல் அறிவுரைகள்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 16-இல் தொடக்கம்


பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 16-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன.
இதற்காக தமிழகம் முழுவதும் 66 விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் 40 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
 பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5-ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தேர்வை 2,377 மையங்களில் தனித்தேர்வர்கள் 42 ஆயிரம் பேர் உள்பட மொத்தம் 8.86 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
 தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் வெள்ளிக்கிழமையோடு நிறைவடைந்தன. இந்த இரண்டு தாள்களுக்குரிய விடைத்தாள்கள் தேர்வு மையங்களிலிருந்து, அந்தந்த கல்வி மாவட்டங்களில் உள்ள விடைத்தாள் காப்பு மையங்களுக்கு பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்டன.
 அடுத்த வாரத்தில் விடைத்தாள்கள் இந்த மையங்களிலிருந்து விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களுக்கும் உரிய பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட உள்ளன.
 மொழிப்பாடங்கள் உள்பட அனைத்துப் பாடங்களுக்கான விடைத்தாள்களும் வெவ்வேறு மாவட்டங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டு திருத்தப்பட உள்ளன.
 விடைத்தாள் திருத்துவது தொடர்பாக அதிகாரிகள் கூறியது:
 இந்த ஆண்டு பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 16-இல் தொடங்கப்பட உள்ளன. ஒரு கல்வி மாவட்டத்துக்கு ஒரு மையம் வீதம் 66 மையங்கள் அமைக்கப்பட உள்ளன.