news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Tuesday 6 October 2015

அரசு சார்பில் "ஜாக்டோ" அமைப்பிற்கு பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை  ஆசிரியர்கள்,உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் என சுமார் 3.50 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு மத்திய அரசுக்கு  இணையான ஊதியம் வழங்க வேண்டும். 6வது ஊதிய குழுவின் அனைத்து படிகளையும் வழங்க வேண்டும். தன் பங்கேற்பு ஊதிய திட்டத்தை ரத்து செய்து பழைய  ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு தமிழகத்தில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய  வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் தொடக்கப் பள்ளிகளை மூடுவதை கைவிட வேண்டும் என்பன உட்பட 15 அம்ச கோரிக்கைகளை ஆசிரியர்கள்  வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜேக்டோ) கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இந்த  அமைப்பில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு உயர்நிலை,  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்,  தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,  தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட 27 சங்கங்கள் இடம் பெற்றுள்ளன. ஜேக்டோ அமைப்பினர் அப்போதைய முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து  கோரிக்கைகளை வலியுறுத்த அனுமதி கோரினர். பேச்சுவார்த்தைக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார். எனினும் குறிப்பிட்ட படி பேச்சுவார்த்தை  நடத்தப்படவில்லை.

இதையடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் 8ல் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பேரணி, ஏப்.19 ம் தேதி அனைத்து மாவட்ட  தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டங்களை ஜேக்டோ அமைப்பினர் நடத்தினர். ஆக.1ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இந்த  போராட்டத்தை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்துப் பேசினார். பல்வேறு போராட்டங்களுக்கு பிறகும் ஜேக்டோ அமைப்பினருடன், தமிழக அரசு  பேச்சுவார்த்தை நடத்த முன் வரவில்லை. இதையடுத்து தமிழகம் முழுவதும் வருகிற 8ம் தேதி 3.50 லட்சம் ஆசிரியர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப்  போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக அனைத்து ஆசிரியர் சங்கங்களும் தயாராகி வந்த நிலையில், நேற்று இரவு 9 மணிக்கு தமிழக பள்ளிக் கல்வித்  துறை இயக்குநர் கண்ணப்பன் ஜேக்டோ ஒருங்கிணைப்பாளர் இளங்கோவனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் இன்று மாலை 4 மணிக்கு பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்க கல்வி இயக்குநர் இளங்கோவன் ஆகியோர்  முன்னிலையில் ஜேக்டோ அமைப்பினருடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து ஜேக்டோ அமைப்பினர் இன்று மாலை  பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கின்றனர். இதுகுறித்து ஜேக்டோ அமைப்பின் உயர் மட்டக் குழு உறுப்பினர் இசக்கியப்பன் கூறுகையில், ‘‘ஆசிரியர் சங்கங்களின்  கோரிக்கைகளுக்கு இன்று நடக்கும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் திட்டமிட்ட படி வருகிற 8ம் தேதி அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்  நடத்தப்படும். பின்னர் உயர் மட்டக் குழுவை கூட்டி தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து முடிவு செய்யப்படும்’’ என்றார்.