news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Sunday 31 January 2016

தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய பல ஆயிரம் ஆசிரியர்கள் கைது: இன்றும் நாளையும் மறியல் தொடரும்

கோரிக்கைகளை  நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பல ஆயிரம் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.  ஆசிரியர்கள் போராட்டத்தால் நாளை பள்ளிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், புதிய  பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய பென்சன் முறையை கொண்டு வர வேண்டும், ஆசிரியர் தகுதி தேர்வை நீக்க வேண்டும்,  தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை தமிழ்மொழி வழிக்கல்வி நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகளை  வலியுறுத்தி ஜனவரி 30, 31, பிப்ரவரி 1ம் தேதி போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு  (ஜாக்டோ) அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் ஜாக்டோ அமைப்பை  சேர்ந்த உயர் மட்ட குழு உறுப்பினர் சங்கர பெருமாள், பொதுக்குழு உறுப்பினர் பக்தவச்சலம், சி.உதயகுமார், ஆர்.பெருமாள்சாமி, சென்னை மாவட்ட  நிர்வாகிகள் சத்தியநாதன், லிங்கேசன் ஆகியோர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு திரண்டு  நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து கோட்டை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர்.  அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் அருகில் உள்ள  மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். மாவட்டங்களில்: இதுபோல மாவட்டங்களிலும் போராட்டம் நடத்திய பல  ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 2 லட்சம் ஆசிரியர்கள் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மதுரை, சிவகங்கை, திண்டுக்கல்,  தேனி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்ட தலைநகரங்களில் சாலைமறியலில் ஈடுபட்ட 4 ஆயிரத்து 44 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.   சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நடந்த மறியலில் 3,219 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

நெல்லையில் நடந்த ஆசிரியர்கள் மறியலின்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. அங்கு 500 பேர் கைது  செய்யப்பட்டனர்.  தூத்துக்குடியில் 250 பேர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,800 ஆசிரியர்கள், திருச்சியில் 707பேர், நாகையில் 1,030பேர்,  தஞ்சையில், 850பேர், புதுக்கோட்டையில் 527பேர், கரூரில் 320 ஆசிரியர், ஆசிரியைகள் கைது செய்யப்பட்டனர். கன்னியாகுமரியில் 190 பேர், திருப்பூரில்  1500, ஈரோட்டில் 1735, நீலகிரியில் 334, கோவையில் 950, விழுப்புரம் 800, கடலூர் 400 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து, சங்கர பெருமாள்  அளித்த பேட்டி: ஜாக்டோவின் மறியல் போராட்டம் வெற்றிகரமாக நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 3  லட்சம் ஆசிரியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். பல்வேறு கட்டமாக போராட்டம் நடத்தியும் அரசு செவிசாய்க்கவில்லை. தொடர் மறியல்  போராட்டத்திற்கு பிறகும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் இறுதி கட்டமாக கோட்டையை முற்றுகையிடும் போராட்டம்  நடத்தப்படும். காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டமும் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியர்கள் போராட்டத்தால் நாளை (திங்கட்கிழமை) தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் 10, 12ம்  வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும், நாளை தமிழகம் முழுவதும் 70 சதவீத ஆசிரியர்கள்  வகுப்புகளை புறக்கணித்து மறியல் நடத்த உள்ளதால் அன்றைய வகுப்புகளும் முற்றிலும் முடங்கும் நிலை உள்ளது. அது மட்டுமல்லாமல்  போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, தேர்தல் பணியில் ஈடுபட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.