news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Wednesday 13 July 2016

தமிழக மேல்நிலைப் பாடத் திட்டம் மேம்படுத்தப்படுமா? - தினகரன் 7.7.16 நாளிதழில் நமது மாநிலத் தலைவர் பேட்டி

   ஐ.ஐ.டியில் தேர்வதற்கான JEE தேர்வுகள், அகில இந்திய மருத்துவ இடங்களுக்கான AIPMT தேர்வு உள்பட அகில இந்திய அளவிலான அத்தனை நுழைவுத்தேர்வுகளிலும் தமிழக மாணவர்கள் தொடர்ந்து பின்தங்குகிறார்கள். அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் தேர்வாகும் நிலையில், தமிழக மாணவர்கள் பின்தங்குவதற்கு காரணம், கடந்த பத்தாண்டுகளாக மேல்நிலைப் பாடத் திட்டங்கள் மாற்றப்படாதது தான் என்று குமுறுகிறார்கள் கல்வியாளர்கள்.
தமிழகத்தில், ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை பாடத் திட்டங்களை கால மாறுதல்களுக்கேற்ப மாற்றியமைப்பது நடைமுறை. பேராசிரியர்களைக் கொண்டு குழு அமைத்து புதிய பாடத் திட்டங்களை வகுப்பார்கள். +1, +2 படிப்புகளுக்கான பாடத்திட்டங்கள் 2006ம் வருடம் மாற்றியமைக்கப்பட்டது. நடைமுறைப்படி, 2011ல் இந்தப் பாடத்திட்டத்தை மாற்றியிருக்க வேண்டும். ஆனால், இன்றளவும் மாணவர்களை அந்த பழைய பாடங்களைத் தான் மாணவர்கள் படித்து வருகிறார்கள். அகில இந்திய நுழைவுத்ேதர்வுகள் மட்டுமின்றி, தமிழக பொறியியல், மருத்துவ சேர்க்கையிலும் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் பின்தங்கியே இருக்கின்றனர்.
‘‘தமிழக மேல்நிலைப் பாடத்திட்டம் மிகவும் பின்தங்கியிருப்பது உண்மை தான்... ஐந்து வருடத்திற்கு ஒருமுறை பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும். 2012ல் அதற்காக ஒரு குழுவை தமிழக அரசு அமைத்தது. ஆனால் புதிய பாடத்திட்டம் இப்போது வரை நடைமுறைக்கு வரவேயில்லை...’’ என்கிறார் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மணிவாசகன்.
 
‘‘ நம் பாடத்திட்ட முறையை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி) தான் உருவாக்குகிறது.
ஆனால் பெரும்பாலான மாநிலங்கள் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (என்.சி.இ.ஆர்.டி)  பாடத்திட்டங்களையே பின்பற்றுகிறார்கள். அதனால், கல்வியில் சீராக முன்னேறி வருகிறார்கள். முதலில், நம் பாடத்திட்ட முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும். தமிழ், வரலாறு தவிர்த்து மற்ற பாடங்களுக்கு என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தைக் கொண்டு வர வேண்டும். அதில், தமிழ்வழி மாணவர்களுக்கு அறிவியல், கணக்கு பாடங்களை மொழிமாற்றம் செய்து தரவேண்டும். ஆந்திராவில் 20 வருடங்களுக்கு முன்னாடியே இதை அறிமுகப்படுத்தி விட்டார்கள்.
ஆனால், நாம் இன்னும் பின்தங்கியே இருக்கிறோம். இந்தமுறை நம் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள், வெகு சிலரே ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அதற்குக் காரணம் நம் பாடத்திட்டம்தான். பொதுத்தேர்வு கேள்வி முறையிலும் மாற்றம் தேவைப்படுகிறது.என்றால் என்ன?’, ‘சமன்பாட்டை விவரி?’ என்று புத்தகத்தில் இருப்பதை மனப்பாடம் செய்து எழுதுவதால் மாணவன் சிந்திக்க இடமே இல்லாமல் போய்விடுகிறது. அறிவியல் தேர்வெழுதும் மாணவர்கள் அதிலுள்ள கணக்கு சம்பந்தமான கேள்வியை தவிர்த்து விடுகிறார்கள். ஆசிரியர்களே அக்கேள்விகளைத் தவிர்க்கும்படி மாணவர்களுக்கு வழிகாட்டுகிறார்கள்.   
கேள்விகளை புரிந்துகொண்டு பதில் எழுதும் வகையில் தேர்வு அமைய வேண்டும். அதுதான் எந்தவொரு இடத்திலும் தனித்தன்மையோடு மாணவர்கள நிற்க வைக்கும். ஆசிரியர்களுக்கும் தரமான பயிற்சிகளை வழங்க வேண்டும். இந்த மூன்றையும் செய்தால் தான் தேசிய அளவில் தமிழக மாணவர்கள் கவனம் பெற முடியும்...” என்கிறார் அழுத்தமாக!
ஐ.ஐ.டி.க்களில் சேர்ப்பதற்காக முதல்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 31,000 மாணவர்களில் வெறும் 60 மாணவர்கள் மட்டுமே தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தைப் படித்தவர்கள். இதன்மூலம் ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வில் கலந்து கொண்ட 12 மாநிலப் பாடத் திட்டங்களில் தமிழகப் பாடத்திட்டம் தான் 0.2% தேர்ச்சியுடன் கடைசி இடத்தைப் பிடித்திருக்கிறது. தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்திலிருந்து தேர்ச்சி பெற்ற 60 மாணவர்களில் எத்தனை பேருக்கு ஐ.ஐ.டிக்களில் சேர இடம் கிடைக்கும் என்பது தெரியவில்லை.
கடந்த ஆண்டில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த 33 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அவர்களில் 9 பேர் மட்டுமே ஐ.ஐ.டிக்களில் சேர முடிந்தது. இம்முறை கடந்த ஆண்டை விட அதிக எண்ணிக்கையிலானவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள போதிலும், தகுதி மதிப்பெண் அடிப்படையில் பார்த்தால் கடந்த ஆண்டை விட குறைந்த மாணவர்கள் தான் ஐ.ஐ.டியில் சேரமுடியும்.
அதேநேரத்தில், சி.பி.எஸ்.இ மாணவர்கள்  53% அளவுக்கு (16,430 பேர்) ஐ.ஐ.டிக்களில் சேர தகுதி பெற்றுள்ளனர். தெலுங்கானா மாநிலப் பாடத்திட்ட மாணவர்களில் 2293 பேரும்(7.7%), மராட்டியப் பாடத்திட்ட மாணவர்களில் 2077(6.7%) பேரும், ராஜஸ்தான் மாநிலப்பாடத்திட்ட மாணவர்களில் 2015(6.5) பேரும், ஆந்திர மாநில பாடத்திட்ட மாணவர்களில் 1307 (4.21%) பேரும் ஐ.ஐ.டிக்களில் சேர தகுதி பெற்றுள்ளனர். தமிழகத்தில் சி.பி.எஸ்.இ மாணவர்கள் 555 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், அவர்களில் சுமார் 10% மாணவர்கள் மட்டுமே தமிழகப் பாடத்திட்டத்திலிருந்து தேர்ச்சி பெற்றிருப்பது பெருமைக்குரியதல்ல.
மிகவும் பின்தங்கிய மாநிலம் என்று விமர்சிக்கப்படும் பிகார் மாநிலப் பாடத் திட்டத்திலிருந்து 900 மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், பிகார் மாநிலப் பாடத்திட்டத்தை விட 15 மடங்கு குறைவான தேர்ச்சியையே தமிழகப் பாடத்திட்டம் பெற்றிருக்கிறது. அடுத்த ஆண்டு முதல் மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  பொறியியல் படிப்புகளுக்கும் பொது நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்படும் என்பதால் அதை எதிர்கொள்ள தமிழக மேல்நிலைப் பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுகிறார்கள் கல்வியாளர்கள்.