news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Monday 2 January 2017

கல்வி குறித்த அடுத்தக்கட்ட நகர்வுக்கு யார் பொறுப்பேற்பது? -தினமணி நாளிதழில் இருந்து

புதிய கல்வி கொள்கை குறித்து விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிற காலம் இது விவாதம் போதுமான அளவிற்கு கவனத்தை ஈர்க்கவில்லை என்ற  பொதுவான குற்றச்சாட்டைமுன்வைத்தாலும் கூட முன்னெடுத்து விவாதித்திருக்க வேண்டிய ஆசிரியர் சமூகம் இது குறித்து சற்றே பாராமுகமாகவே இருப்பது சற்று வேதனையானதே.

எந்த காலத்தில் சமூக பிரச்சனைகள் குறித்து நாட்டின் பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்து போராடியிருக்கின்றனர். இன்று மட்டும் கருத்து தெரிவிப்பார்கள் என்றும் எதிர்வினையாற்றுவார்கள் என்றும் எதிர்பார்க்க. கருத்து தெரிவிப்பதும் கருத்துக்காக பேராடுவதும் மிக சொற்ப மனிதர்கள் அல்லது இயக்கங்கள் மட்டுமே அப்படித்தான் வரலாறு சொல்கிறது.


 யார் உதறி தள்ளினாலும் ஆசிரியர் சமூகம் தனக்கான உரையாடலை தொடங்க வேண்டியிருக்கிறது. ஆசிரியர்களுக்கான உரையாடல் மற்றும் ஆசிரியர்களுக்கிடையேயான உரையாடல் தான் கல்விப்புலத்தின் மிக முக்கியமான இடமாகும். ஆசிரியர்களுக்கிடையேயான உரையாடல் தான் மாணவர்களுக்கான உரையாடலாக மறுவடிவம் பெற முடியும்.


கல்வியை வெறும் திறன்களாக பார்க்கிற ஒரு குறுகிய மனோபாவம் வளர்ந்திருக்கிறது. செறிவூட்டப்பட்ட அறிவின் அடையாளமாக கல்வியை ஈர்க்கிற பார்வை நம்மிடமிருந்தது. இடையில் எங்கோ அதை தொலைத்துவிட்டோம். எங்கு தொலைத்தோம் என்று தேடிப்போனால் வரலாறு நம்மை தண்டிக்ககாத்திருக்கிறது.

எது கற்றல்? கற்றலின் அடிப்படைதன்மை என்ன? அச்சடிக்கப்பட்ட காகிதத்திலிருக்கிற விஷயங்களை இம்மிபிசகாமல் எடுத்து சொல்வது தான் கல்வியா? பாடப்புத்தகத்தை பிரதி எடுத்து திரும்ப சொல்வதுதான் கல்வியா? என ஆயிரம் கேள்விகளை கல்வியாளர்கள் எழுப்புகிறார்கள். யார் கல்வியாளர்கள் என்றும் ஒரு குழப்பம் நிலவுகிறது. மகிழ்ச்சியாகவும் உணர்வுபூர்வமாகவும் ஒன்றை கற்றுத்தருகிற பொழுது அல்லது கற்றுக்கொள்கிற பொழுது கட்டமைக்கப்படவேண்டிய புற சூழல் பற்றியும் நாம் அதிகம் சிந்திக்கவேண்டியிருக்கிறது.

புறச்சூழலின் முக்கிய கதாபாத்திரம் ஆசிரியர். ஆசிரியரே கல்வியை கட்டமைக்கிற தலைமைப்பொறியாளன். பாடப்புத்தகம் என்பது ஒரு கையேடு பிரபஞ்சத்தின் எல்லா பொருள்களைப்பற்றியும் புத்தகமாக வகுப்பறைக்குள் எடுத்து செல்ல முடியாது. அந்த கனத்தை தூக்க முடியாத ஒரே காரணத்தினால் புத்தகங்கள் குறிப்புகளாக சுருக்கப்பட்டன.

பெரிய விஷயங்களின் சுருக்கப்பட்ட வடிவமே பாடபுத்தகம் சுருக்கப்பட்ட விஷயங்களின் விரிவாக்கப்பட்ட ஆடுகளமே வகுப்பறை. வகுப்பறைக்கான விஷயங்களை விவாதப்படுத்துகிற, ஜனநாயகவாதியே ஒரு மிகச்சிறந்த ஆசிரியன்.

உரையாடல் நடத்துகிற, வேடிக்கை காட்டுக்கிற, சிந்திக்க தூண்டுகிற, சிரிக்க வைக்கிற,ஒரு சிந்தனையாளனே ஆசிரியன். ஆசிரியன் பல வேடமிடுகிறான் பல வேஷங்களை கட்ட வேண்டும் அவன் ஒரு வேடிக்கை காட்டுகிற கோமாளி. நிகழ்த்து கலை காட்டுகிற ஒரு பொம்மலாட்டக்காரன், பல ஆச்சர்யங்களை நிகழ்த்துகிற ஒரு நடிகன், பல தேசத்து கதை சொல்லுகிற ஒரு கதைசொல்லி அவர் ஒரு கலைஞன் ஒரு ஓவியன் இப்படி சக பரிமானங்களுக்குள்ளும் தன்னை ஆட்படுத்தி அதிசயமாய் மீட்டெடுக்கிற மகா கலைஞனே ஒரு ஆசிரியன்.

மருத்துவருக்கு மருத்துவம் தெரிந்தால் போதும் பொறியாளனுக்கு என்ஜினீயரிங் தெரிந்தால் போதும். வணிகனுக்கு வியாபாரம் மட்டுமே போதும் அவரவர்களுக்கு அவரவர் அறிவு போதுமானது ஆசிரியர்கள் அப்படி அல்ல சமூகத்திற்கான பலரையும் உருவாக்குகிற ஒரு பல்கலைகழகமாக இருக்க வேண்டும்.அவன் ஒரு தனி மனித இயக்கம். அவன் ஒரு பன்முக திறமைசாலியாக இருக்க வேண்டியுள்ளது.

மருத்துவர்களையும், பொறியாளர்களையும், மென்பொருள் திறமையாளர்களையும், உருவாக்குகிற அதே நேரத்தில் எழுத்தாளனை அவன்தான்உருவாக்க வேண்டும். ஓவியனை உருவாக்க வேண்டும் கலைஞனை உருவாக்க வேண்டும் சிந்தனையாளனை உருவாக்க வேண்டும் ஏன் ஒரு நடிகனைக்கூட உருவாக்க வேண்டும்.

ஒரு வகுப்பறையில் 30 குழந்தைகளில் 30 விதமான மனிதர்கள் ஒளிந்துகிடக்கிறார்கள். 30 குழந்தைகளையும் ஒரே விதமாக வளர்த்தெடுக்க முடியாது ஒளிந்துகிடக்கிற ஓவியனை கலைஞனை எழுத்தாளனை உயிருட்டவேண்டும். வகுப்பறைக்குள் தினந்தோறும்பல நூறு பூக்கள் பூக்கின்றன ஒவ்வொரு பூவிற்கும் ஒவ்வொரு வாசம்.

பல திறமையானவர்களை கண்டுபிடித்து பல்வேறு மனிதர்களை படைப்பவனே ஆசிரியருக்கான முழு தகுதியையும் பெறுகிறான். ஆசிரியருக்கு தொழில்நுட்பமும் நவீன உபகரணங்களும் கைவரம் பெற வேண்டும். குழந்தைகளுக்குள்ளே ஒளிந்துகிடக்கின்ற ஆற்றல்களை அளவிடுகிற, புதிய மனிதர்களை இனம் காணுகிற அதே நேரத்தில் மற்றொரு மகத்தான பணி காத்திருக்கிறது.

 திறமைகளை காட்சிப்படுத்த வேண்டும். வகுப்பறையை ஜனநாயகப்படுத்த வேண்டும் அதற்கு இரண்டு முக்கியமான கருவிகளை கையாள தெரியவேண்டும் 1.கற்பனை 2.வாசிப்பு. கற்பனை உலகத்தை வாசிக்க தெரிந்த ஆசிரியர்கள் மட்டுமே கற்பனை உலகத்திற்குள் குழந்தைகளை அழைத்து செல்ல முடியும் அவர்களே புதிய உலகத்தை படைக்கிறார்கள். படைப்பாளிகளாக மாறுகிறார்கள்.