news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Friday 26 August 2016

பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு பற்றி. நமது. தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் திரு. முனைவர் வே.மணிவாசகன் அவர்களின் கருத்து

பயோ-மெட்ரிக் வருகைப் பதிவேடு முறையை தலைமைச் செயலகம் முதல் அனைத்து அரசு அலுவலகங்களிலும் கொண்டுவர வேண்டும் என்று அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.
அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்கள் வருகை யைப் பதிவு செய்வதற்காக வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இதை மாற்றிவிட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவேட்டுக்கு பயோ-மெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
பயோ-மெட்ரிக் முறை ஏற்கெனவே பரீட்சார்த்த முறையில் பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங் களில் சில அரசு பள்ளிகளில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பயோ-மெட்ரிக் முறை வருகைப் பதிவேடு அண்மையில் அறிமுகப்படுத்தப் பட்டது. பயோ-மெட்ரிக் முறை வந்தபிறகு பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் பணிக்கு வந்துவிடுவதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசு அலுவலகங்களிலும் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு முறை படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறையை சென்னை தலைமைச் செயலகம் தொடங்கி அனைத்து அரசு அலுவலகங்களிலும் கொண்டுவர வேண்டும் என்று ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்துகின்றன. இது தொடர்பாக ஆசிரியர், மாணவர், அரசு ஊழியர் மற்றும் மாணவர் அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:
சாமி.சத்தியமூர்த்தி (தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர்)
பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு திட்டம் வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் கல்வித்துறை யில் மட்டுமின்றி அரசின் அனைத்து துறை அலுவலகங்களிலும் இதை நடைமுறைப்படுத்த வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளி களுக்கு ஆசிரியர்கள் உரிய நேரத்தில் செல்ல வகைசெய்யும் வகையில் உரிய போக்குவரத்து வசதிகளை உறுதிசெய்த பிறகு பயோ-மெட்ரிக் முறையை தாராளமாக கொண்டுவரலாம்.
கே.மணிவாசகன் (தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர்)
பள்ளிகளில் பயோ-மெட்ரிக் வருகைப் பதிவேடு முறையை கொண்டுவருவதால் அனைத்து ஆசிரியர்களும் குறிப்பிட்ட நேரத்துக்குள் பள்ளிக்கு வந்துவிடுவார்கள். பள்ளிக் கல்வித்துறையில் மட்டுமின்றி தலைமைச் செயலகம் உட்பட அனைத்து அரசு துறைகளுக்கும் இந்த முறையை கொண்டுவர வேண்டும். பள்ளிகளுக்கு மட்டும் கொண்டுவர முடிவு செய்திருப்பது சரியானதல்ல.
வி.மாரியப்பன் (இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர்)
தற்போதைய வருகைப் பதிவேட்டில் ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவரையும் பெயர் சொல்லி அழைப்பார்கள். பயோ-மெட்ரிக் முறை வரும்போது ஆசிரியர்கள் மாணவர்களை பெயர் சொல்லி அழைக்கக்கூடிய உறவு இல்லாமல் போய்விடும். அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் எவ்வளவோ செய்யவேண்டியுள்ளது. இந்த பணிகள்தான் இப்போதைய தேவையே தவிர பயோ-மெட்ரிக் போன்ற கவர்ச்சிகரமான திட்டங்கள் அல்ல.
ஜெ. கணேசன் (தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க தலைவர்)
கடைநிலை ஊழியர் முதல் அரசு நிர்வாகம் தொடர்பான அனைவருக்கும் இந்த முறையை அமல்படுத்த வேண்டும். இந்த வருகைப் பதிவு முறை வந்தால் காலையில் 10 மணிக்கு வந்து மாலை 5.45 மணிக்கு பணிமுடித்து சென்றுவிடுவர். சில துறைகளில் இதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. போக்குவரத்து தொடர்பான பிரச்சினைகளால்தான் அலுவலகங்களுக்கு பணியாளர்கள் தாமதமாக வரும் சூழல் ஏற்படுகிறது. எனவே, நடைமுறைச் சிக்கல்களை ஆய்வு செய்து, அவற்றை தவிர்த்துவிட்டு இந்த வருகைப் பதிவு முறையை அமல்படுத்தலாம்.
ஆர்.தமிழ்ச்செல்வி (அரசு ஊழியர் சங்க மாநில தலைவர்)
நவீன தொழில்நுட்பத்தை அரசு நிர்வாகத்தில் புகுத்தும்போது அதற்கு ஊழியர்கள் தடையாக இருக்க கூடாது. 8 மணி நேரம் வேலை என்பது அமலானால், அலுவலர்களின் வருகை, வீட்டுக்கு நேரத்துக்கு செல்வதும் உறுதிப்படுத்தப்படும், அதே நேரம், தலைமைச் செயலகம் தவிர மற்ற துறைகளில், களப்பணி இருக்கும். எனவே, பயோ மெட்ரிக் கொண்டுவரும் போது, ஊழியர் சங்கங்களுடன் பேசி பணி ரீதியிலான நடைமுறைச் சிக்கல்களை முழுமையாக களைந்திட வேண்டும்.
கு.பாலசுப்பிரமணியன் (அகில இந்திய மாநில அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர்)
பயோ மெட்ரிக் வருகைப் பதிவு என்பது வரவேற்க கூடிய ஒன்றுதான். அதே நேரம் உயர் நிலை அதிகாரிகளுக்கும் அது பொருந்த வேண்டும். நிர்வாக பதவிகளில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளும் இந்த திட்டத்துக்குள் வரவேண்டும். அப்போதுதான் மற்ற ஊழியர்கள் திட்டத்தை புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பணியாளர்களுக்கு மட்டும் என கொண்டுவந்தால், அவர்கள் நசுக்கப்படுவதற்கு இது வழிவகுக்கும்.
பயோ-மெட்ரிக் முறை அடுத்த ஆண்டு அமல்
அரசு பள்ளிகளில் பயோ-மெட்ரிக் வருகைப் பதிவேடு முறையை கொண்டுவருவது குறித்து பள்ளிக்கல்வி இயக்கக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “முதற்கட்டமாக இதற்காக அனைத்து அரசு பள்ளிகளுக்கும் தேவையான பயோ-மெட்ரிக் இயந்திரங்கள் வாங்கப்பட வேண்டும். இந்த இயந்திரங்களை வாங்குவதற்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மூலம் டெண்டர் விடப்படும். இந்தப் பணிகளை முடிவடைய ஏறத்தாழ 6 மாதங்கள் ஆகிவிடும். எனவே, அடுத்த கல்வி ஆண்டு (2017-2018) முதல் அரசு பள்ளிகளில் பயோ-மெட்ரிக் முறையை அமல் படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் பள்ளிக்கு தாமதமாக வரும் ஆசிரியர்கள், மாணவர்கள் மீதான நடவடிக்கைகள் தொடர்பான விதிமுறைகள் இனிமேல்தான் வகுக்கப்படும்” என்றார்.
பழிவாங்க கூடாது
டெல்லியில் மத்திய தலைமைச் செயலகத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயோ-மெட்ரிக் வருகைப் பதிவேடு முறையில், வருகை, திரும்பி செல்லும் நேரம் மட்டுமே கணக்கில் எடுக்கப் பட்டு வருகிறது. அதே நேரம் சில துறைகளில், வருகைப் பதிவு கண்காணிக்கப்பட்டு, நேரம் தவறும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பழிவாங்கப்படுவதாகவும் மத்திய அரசு ஊழியர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். தற்போது. மத்திய அரசைப் போன்று தமிழக அரசும் பயோ-மெட்ரிக் முறையை பின்பற்ற முடிவெடுத்திருக்கும் நிலையில், ஆட்சியாளர்களும் இந்த கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும். வேலைநேரம் அதிகரிக்காமல் இருப் பதற்கு, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழிவாங்கும் நடவடிக்கையும் இருக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் பணியாளர்கள் சங்கங்கள் சார்பில் முன் வைக்கப்படுகின்றன.