news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Friday 25 December 2015

4 மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்2 மாணவர்களின் தேர்ச்சியை அதிகரிக்க 10 லட்சம் கையேடு இந்த வார இறுதிக்குள் விலையின்றி வழங்க ஏற்பாடு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் படிக்கும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 மாணவ–மாணவிகளுக்கு 10 லட்சம் கையேடுகள் இந்த வாரத்திற்குள் விலை இன்றி வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த மிக கனமழை காரணமாக வரலாறு காணாத வகையில் பெரிய அளவில் வெள்ளச்சேதம் ஏற்பட்டது. தொடர்ந்து மழையின் காரணமாக 33 நாட்களுக்கு மேலாக பள்ளிகளுக்கு விடுமுறைவிடப்பட்டது.
எனவே மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக மேற்கண்ட அந்த 4 மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 மாணவ–மாணவிகளுக்கு கற்றலில் குறைபாடு வரக்கூடாது என்பதற்காக அவர்களின் தேர்ச்சியை அதிகரிக்க கையேடு வழங்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
அச்சடிக்கும் பணி
இதையொட்டி மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் கையேடுகள் தயாரிக்கும் பணியை செய்து முடித்தது. எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ஒரே கையேடுவும், பிளஸ்–2 மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் பாடங்களுக்கு ஒரே கையேடுவும், வேதியியல், இயற்பியல், கணிதம், உயிரியல் முதலிய பாடங்களுக்கு கையேடுகள் தனியாகவும் வழங்கப்பட உள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகள் அனைவருக்கும் விலை இன்றி வழங்கப்பட உள்ளன. மொத்தத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கையேடுகள் வழங்கப்பட இருக்கிறது.
தற்போது கையேடுகள் அச்சடிக்கும் பணி அரசு அச்சகத்தில் நடைபெற்று வருகிறது. விலை இன்றி வழங்கப்பட உள்ள அந்த கையேடுகளை படித்தால் கண்டிப்பாக நல்ல தேர்ச்சி விகிதம் இந்த மாவட்டங்களில் இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்த வார இறுதிக்குள் கிடைக்க ஏற்பாடு
இந்த கையேடுகள் எப்போது வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதாவிடம் கேட்டதற்கு அவர் பதில் அளிக்கையில், ‘மாணவர்கள் நலன் கருதி கையேடு அச்சடிக்கப்படுகிறது. இந்த வார இறுதிக்குள் கையேடு வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது’ என்றார்.