பயனுள்ள வலைத்தளங்கள்

ஆசிரியர் தொடர்பான வலைத்தளங்கள்

நாளிதழ்கள்

Friday, 9 October 2015

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 லட்சம் ஆசிரியர்கள் இன்று ஸ்டிரைக் 56 ஆயிரம் அரசு பள்ளிகள் மூடல்



சென்னை: ஜேக்டோ அமைப்பினர் அறிவித்தபடி 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 3 லட்சம் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தமிழகம் முழுவதும் பெரும்பாலான பள்ளிகள் இயங்கவில்லை. மாணவர்கள் வராததால் பள்ளிகள் வெறிச்சோடி காணப்பட்டன. தமிழகத்தில் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்கப் பள்ளிகள் 23 ஆயிரத்து 815, நடுநிலைப் பள்ளிகள் 7307, உயர்நிலைப் பள்ளிகள் 3096, மேனிலைப் பள்ளிகள் 2595 என மொத்தம்  56,575 பள்ளிகள் உள்ளன. இதில்,  3 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை 3 கட்டமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்தனர். ஆனால் அரசுத் தரப்பில் ஆசிரியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் 4வது கட்டமாக வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆசிரியர்கள் அறிவித்தனர்.

ஜேக்டோ அமைப்பில் இணைந்துள்ள 24 ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளை பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், தொடக்க கல்வித்துறை இயக்குநர் ஆகியோர் நேரில் அழைத்து நேற்று முன்தினம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான முகாந்திரம் ஏதும் இல்லை என்று தெரிவித்துவிட்டனர். இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்து திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடக்கும் என்று நேற்று முன்தினம் மாலை அறிவித்தனர்.

நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் ஒரு நாள் விடுப்பு கடிதம் எழுதிக் கொடுத்தனர்.தொடர்ந்து 3 லட்சம் ஆசிரியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்  இயங்கவில்லை.முன்னதாக நேற்று தொடக்க பள்ளி ஆசிரியர்கள் பள்ளிகளை பூட்டி உதவி தொடக்க அலுவலரிடம் சாவியை ஒப்படைப்பது என்று தீர்மானித்து இருந்தனர். ஆனால், பல இடங்களில் தொடக்க கல்வி அலுவலரிடம் கொடுக்கப்படவில்லை. சில மாவட்டங்களில் மட்டும் பள்ளிகளின் சாவியை ஒன்றாக திரட்டி மொத்தமாக கொண்டு  போய் தொடக்க அலுவலரிடம் கொடுக்கப்பட்டது.

அதனால், எந்த சாவி, எந்த பள்ளிக்கானது என்று தெரியாமல் அந்தந்த பள்ளிகளுக்குரிய சாவியை பிரித்தெடுப்பதில் தொடக்க அலுவலர்கள் திணறினர். இதனால், இன்று காலை வழக்கம் போல் பள்ளிகளை திறந்து வைப்பதிலேயே சிக்கல் ஏற்பட்டது,. இதற்கிடையே ஆசிரியர்களின் வேலை நிறுத்தத்தை முறியடிப்பதற்காக பள்ளி கல்வி துறை செயலாளர் சபீதா அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:எக்காரணத்தை கொண்டும் பள்ளிகள் மூடியிருக்க கூடாது. பள்ளிகளை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்தையும் மூன்று மண்டலங்களாக பிரித்து ஒரு மண்டலத்திற்கு ஒரு அதிகாரியை ( மாவட்ட கல்வி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர்)  நியமிக்க வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களை வைத்து பள்ளிகளை திறக்க வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆட்கள் பற்றாக்குறை உள்ள இடங்களில் கலெக்டர் அலுவலகத்தில் வேலை செய்யும் அலுவலர்களை வைத்து பள்ளிகளை திறக்க வேண்டும். பள்ளிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று காலையில் இருந்து பள்ளிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிந்ததால் பெரும்பாலான மாணவர்கள் பள்ளிகளுக்கு வரவில்லை. அதனால், பள்ளிகள் வெறிச்சோடி காணப்பட்டன. சில இடங்களில் வழக்கமாக பள்ளிக்கு வந்த மாணவர்கள் பள்ளி உண்டா, இல்லையா என்ற குழப்பத்தில் திரும்பி சென்றனர். அப்போது, கலெக்டர் அலுவலக அதிகாரிகள் மாணவர்களை வலுக்கட்டாயமாக இருக்க வைத்து சத்துணவு சாப்பிட்டு தான் செல்ல வேண்டும் என்று கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மாணவர்கள் சத்துணவுக்காக பள்ளிகளில் காத்திருந்தனர்.

90
சதவீதம் ஆசிரியர்கள் விடுப்பு கடிதம் கொடுத்து விட்டு பள்ளிக்கு வரவில்லை. பள்ளிக்கு வராத ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள், அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.