பயனுள்ள வலைத்தளங்கள்

ஆசிரியர் தொடர்பான வலைத்தளங்கள்

நாளிதழ்கள்

Tuesday, 29 August 2017

SEP - 7 தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் மறியல் போராட்டமாக அறிவிப்பு

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வரும் செப். 7-ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த ஜூலை 18-இல் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம், ஆகஸ்ட் 5-இல் சென்னையில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம், ஆகஸ்ட் 22-இல் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அடுத்தகட்டப் போராட்டம் குறித்து முடிவெடுப்பதற்காக ஜாக்டோ ஜியோ உயர்நிலைக் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஆக.29) நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
ஜாக்டோ ஜியோ தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் ஜெ.கணேசன், பெ.இளங்கோவன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தியும் எங்களிடம் தமிழக அரசு இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதைத் தொடர்ந்து எங்களது உரிமையை நிலைநாட்டும்வகையில் திட்டமிட்டபடி வரும் செப். 7-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.
செப். 8-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும். இதற்குப் பிறகும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் செப்.10-ஆம் தேதி போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும். நமது அமைப்பின் சார்பில் மாநிலத்தலைவர் மணிவாசகன் கலந்துகொண்டார் .

 

Saturday, 26 August 2017

ஜாக்டோ- ஜியோ செப்டம்பர் 7 தொடர் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

 ஜாக்டோ- ஜியோ  செப்டம்பர் 7 தொடர் வேலை  நிறுத்த  ஆயத்த மாநாடு  26.8.2017 காலை 10.00மணிக்கு மதுரை கே கே நகர் நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் ஹால்  நடைபெற்றது.நமது அமைப்பின் மாநிலப் பொதுச்செயலாளர் இரா.பிரபாகரன் அவர்களும் மாவட்டத் தலைவர் நவநீத கிருஷ்ணன் அவர்களும் கலந்துகொண்டு எழுச்சியுரை ஆற்றினர்.
 

Tuesday, 22 August 2017

இன்று (22-ந்தேதி) தமிழகம் முழுவதும் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.




தமிழ்நாடு முழுவதும் இன்று 12 லட்சம் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதிக்குபின் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் 5 லட்சம் தமிழக அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் இணைக்கப்பட்டு உள்ளனர். இதற்காக மாதந்தோறும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது.

இதுவரை பிடித்தம் செய்யப்பட்ட தொகை ரூ.18,300 கோடி. மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையத்திடம் தமிழக அரசு ஒப்படைக்கவில்லை. இதனால் ஓய்வூதிய பலன்கள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கிடைக்கவில்லை.

இதை கண்டித்து ஜாக்டோ, ஜியோ கூட்டமைப்பு சார்பில் கடந்த ஜூலை மாதம் 18-ந்தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும். மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 5-ந்தேதி 60 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

இந்த நிலையில் இன்று (22-ந்தேதி) தமிழகம் முழுவதும் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் நடந்த இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சுமார் 12 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை இல்லாததால் வகுப்புகள் நடைபெறவில்லை. மாணவர்கள் பாடம் படிக்க முடியாமல் அவதிப்பட்டனர்.

சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் இன்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.

தமிழக அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். புதிய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று முழக்கமிட்டார்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தால் நுங்கம்பாக்கம் சாலை முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராட்டம் குறித்து ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் இளங்கோவன், கணேசன் ஆகியோர் கூறியதாவது:-

எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு இதுவரை தமிழக அரசு செவி சாய்க்கவில்லை. எங்களை அழைத்து பேச்சு வார்த்தை கூட நடத்தவில்லை.

இதனால் தமிழகம் முழுவதும் 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அரசு பணிகள் அனைத்தும் முடங்கி உள்ளன. பள்ளிகள் செயல்படவில்லை.

அடுத்த கட்டமாக செப்டம்பர் 7-ந்தேதி காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். தொடர் வேலை நிறுத்த போராட்டத்தின்போது ஆர்ப்பாட்டம், மறியல், சிறை செல்லும் போராட்டம் என தினமும் போராட்டங்களை நடத்துவோம்.

கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். தமிழக அரசு எங்களது நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Saturday, 19 August 2017

22. 8 .17 அன்று ஜேக்டோ-ஜியோ சார்பாக திட்டமிட்டபடி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும் .

அன்புடைய ஆசிரியர்களே - அரசு ஊழியர்களே வணக்கம் 

22. 8 .17 அன்று ஜேக்டோ-ஜியோ சார்பாக திட்டமிட்டபடி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும் .
நமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராடுவோம் .
போராட்ட களப்பணிகள் மிகச் சிறப்பாக உள்ளது என்பதனை பறைசாற்றும் விதமாகவே மதிப்புமிகு தமிழக அரசின் தலைமைச் செயலாளரின் ஆணை (No work - No pay ) இருக்கின்றது , அதாவது போராட்ட களத்தை பிசுபிசுக்க இது போன்ற அறிக்கைகளை ஒரு நாள் முன்னதாக வெளியிடும் அரசு இப்போது 5 நாட்களுக்கு முன்னதாகவே வெளியிடுகிறது என்றால் களப்பணியில் நமது ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் ஆற்றி வருகின்ற பணிக்கு கிடைத்த முதல் வெற்றியாகவே கருத வேண்டும் .
போராட்ட களம் இது போன்ற அறிவிப்புகளை கண்டு தொய்வடையாது , களப்பணிகளை மேலும் தீவிர படுத்திட வேண்டுகிறோம்.
சிந்திப்பீர் !! ஒரு நாள் ஊதியமா , தன்மானத்தோடு வாழ்ந்திட ஓய்வூதியமா !!!
நாம் ஒன்றுபட்டு போராடுவோம் ,
நமது உரிமைகளை மீட்போம் .


இவன்
பெ.இளங்கோவன் & ஜெ.கணேசன்
தொடர்பாளர்கள் ஜாக்டோ - ஜியோ (JACTTO - GEO ).

Friday, 18 August 2017

11ம் வகுப்பு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாளை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்

11ம் வகுப்பு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாளை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களின் மாதிரி வினாத்தான் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.
அனைத்து பள்ளிகளிலும் மாதிரி வினாத்தாள் அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.  மேலும், சிறந்த கல்வியாளராக மாணவர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். பிளஸ் 1ல் தேர்ச்சி பெறாத மாணவர்களும், பிளஸ் 2 வில் சேர்ந்த பின்னர் தேர்வெழுத முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கல்வித்துறைக்காக பல்வேறு மாற்றங்களை உருவாக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் எனவும் கூறியுள்ளார். மேலும், கட்டமைப்பு, கல்வி தரத்தில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வாகியுள்ளது எனவும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பொது தேர்வை கண்டு மாணவர்களும், பெற்றோர்களும் அச்சப்பட வேண்டாம் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். மேலும், பிளஸ் 1 காலாண்டு தேர்வு விரைவில் நடைபெறவுள்ளதால் மாதிரி வினாத்தாள் வௌியிடப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
அரசாணை 50-நாள் -09.08.2017-பள்ளிகல்வி -11 ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கான மதிப்பீடு முறை வடிவமைப்பு மற்றும் நெறி முறைகள் –ஆணை  

Sunday, 6 August 2017

கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் குவிந்தனர் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் மாபெரும் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த பல ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும்  அரசு ஊழியர்கள் நேற்று வரும் வழியிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர். ஆனாலும், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில்  ஆயிரணக்கணக்கான அரசு ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய  ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் தொடர வேண்டும்,  ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதிய  மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த  வேண்டும் என்பன உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பல  ஆண்டுகளாக  போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் கோரிக்கை ஆர்ப்பாட்டங்களை மாவட்ட  தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்தினர்.  இதையடுத்து, 25ம்  தேதி ஜாக்டோ ஜியோ உயர்மட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சென்னையில் நடந்தது.  அந்த கூட்டத்தில், ஆகஸ்ட் 5ம் தேதி  (நேற்று) சென்னையில் கோட்டை நோக்கி பேரணி  நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது.


மிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் (JACTTO-GEO) பல்லாயிரக்கணக்கானோர் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என போராட்டம் நடத்தினர். சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகே நடந்த இந்த போராட்டத்தில் தங்களின் குறைகளை கோஷங்களாக எழுப்பினர்.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சார்பில் நடந்தப்பட்ட இந்த போராட்டத்தில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர். போராட்டத்திற்கு முன்னரே அனுமதி பெற்ற நிலையிலும் வாலாஜா சாலையில் இருந்து மெரீனா பீச் வரை போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். சென்னையின் புறநகர்ப்பகுதிகளில் வாகனங்களில் வந்துக்கொண்டிருந்த ஊழியர்களை திருப்பி அனுப்பும் முயற்சியும் தமிழக அரசு எடுத்திருந்தது. 
ஆனாலும் காலை முதலே ஆயிரக்கணக்கான பள்ளி ஆசிரியர்களும், மற்ற அரசு ஊழியர்களும் போராட்டத்தில் கலந்துக்கொள்ள வந்துக்கொண்டே இருந்தனர். இதனால் வாலாஜா சாலை, காமராஜர் சாலை முழுவதும் போக்குவரத்து நகரமுடியாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டது.போராட்டத்தில் கலந்துகொண்ட பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில் "ஓய்வூதியம் என்பது வயதான காலத்தில் அடுத்தவர்களை எதிர்பார்க்காமல் நாங்கள் வாழ உதவியாக இருந்தது. ஆனால் அரசு எங்களின் ஓய்வூதியத்தை 2003 -ம் ஆண்டிலிருந்து நிறுத்திவிட்டது. அதனால் மீண்டும் அரசு ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே தற்போது போராட்டத்தை கையில் எடுத்துள்ளோம். எங்களின் முக்கிய கோரிக்கையே 2003 க்கு பிறகு அரசுப்பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்தவேண்டும் என்பது. இதை பரிந்துரைப்பதற்காக வல்லுநர் குழு ஏற்கெனவே உருவாக்கப்பட்டது. அந்த வல்லுநர் குழுவின் அறிக்கையை பெற்று அனைத்துப் பணியாளர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்வதற்கான அறிவிப்பை அரசு உடனடியாக வெளியிட வேண்டும்” என்றனர்.

மேலும் அவர்கள் பேசுகையில், “எங்களுக்கு சிறப்புக் காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் போன்றவற்றை அரசு தர வேண்டாம். இவற்றையெல்லாம் நிறுத்திவிட்டு, நாங்கள் ஓய்வுபெற்ற பின் யாரையும் சாராமல் வாழ ஒய்வூதியம் கொடுத்தாலே போதும். கடந்த பல ஆண்டுகளாக ஜாக்டோ - ஜியோ அமைப்பு பல்வேறு போராட்டங்களை செய்து பார்த்துவிட்டது. ஆனால் அரசு இதை ஒரு பிரச்னையாகவே எடுத்துக்கொள்ளவில்லை. போராட்ட நேரத்தில் மட்டும் எங்களை அழைத்து பல வாக்குறுதிகளை கொடுப்பார்கள். ஆனால் அதன் பிறகு அதுபற்றி மறந்துவிடுகிறார்கள். இப்படி அரசு ஊழியர்களை கண்டுகொள்ளாத அரசின் கவனத்தை ஈர்க்கவும், பழைய ஓய்வூதியம் திரும்ப கிடைக்கவும் வழி செய்ய வேண்டும். இவற்றை வலியுறுத்திதான் பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்களை கொண்டு போராட்டம் நடத்தியிருக்கிறோம். அரசு இதையும் கண்டுகொள்ளாவிட்டால் ஆகஸ்ட் 22 தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தமும் பின்பு செப்டம்பர் 7 கால வரையற்ற வேலைநிறுத்தமும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் " என்றனர்.